முன்னாள் போராளி மீது கத்தி குத்து: சந்தேகநபர் தப்பியோட்டம்

பொத்துவில் – ரொட்டை பகுதியில் முன்னாள் போராளியொருவர் மீது மேற்கொள்ளப்பட்ட கத்தி குத்து தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

இந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதுடன், சந்தேகநபர் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் கோமாரி ரொட்டையை சேர்ந்த 55 வயதுடைய சரவணமுத்து நாகராசா (வம்பு சிவராசா) என்பவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நேற்று பிற்பகல் தந்தையொருவர் தனது மகள் மீது கத்தியால் குத்த முற்பட்டுள்ளார். இதனை பார்த்த சரவணமுத்து நாகராசா அதனை தடுத்துள்ளார்.

இதன்போதே அவர் கத்தி குத்திற்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். சம்பவத்தையடுத்து சந்தேகநபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் உயிரிழந்தவரின் சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், தப்பியோடிய நபரை கைது செய்வதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.