அலட்சியங்களால் பலியான இரண்டு சிறு உயிர்கள்

மயிலாடுதுறை அருகே மண் சரிவில் சிக்கிய இரு சிறுமிகள் தேவையான நேரத்தில் மருத்துவ உதவிகள் கிடைக்காத காரணத்தால் பரிதாபமாக உயிர் இழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது.

நாகை மாவட்டம் குத்தாலம் பக்கத்தில் உள்ள ராஜகோபாலபுரம் ராஜா காலனியை சேர்ந்தவர் வழக்கறிஞர் ராமமூர்த்தி. இவர் வீட்டிற்கு உறவினர்களின் மகள்கள் இருவர் வருகை தந்துள்ளனர்.

கும்பகோணத்தை சேர்ந்த சியாமளா மற்றும் வர்ஷினி ஆகிய இரு சிறுமிகளான இவர்கள் விளையாடுவதற்காக வெளியே சென்றிருக்கின்றனர்.

 

அருகே உள்ள கொம்புக்காரன் குட்டையில் இவர்கள் விளையாடி கொண்டிருக்கும்போது திடீரென மண் சரிய ஆரம்பித்திருக்கிறது.

குழந்தைகள் இருவரும் அலறிய சத்தத்தில் ஓடி வந்த ஊர்க்காரர்கள் சிறுமிகளை மீட்டனர். ஆம்புலன்சிற்கு அழைக்க அது வராத காரணத்தால் இரு சக்கர வாகனத்தில் குழந்தைகளை தூக்கி கொண்டு குத்தாலம் அரசு மருத்துவமனைக்கு சென்றிருக்கின்றனர். அங்கும் மருத்துவர் இல்லை.

மீண்டும் அங்கிருந்து மயிலாடுதுறை மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் போது வழியிலேயே அந்த இரு சிறுமிகளும் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

10 நாட்களுக்கு முன் எடுக்கப்பட்ட மண்ணை நீக்காமல் வைத்திருந்தாலும் ஆம்புலன்ஸ் குறித்த நேரத்தில் வராமல் இருந்ததாலும் மருத்துவர் இல்லாமல் போனதாலும் இரண்டு பிஞ்சு உயிர்கள் அநியாயமாக பலியாகி இருப்பதால் அந்த ஊர் மக்கள் கொதிப்படைந்து போராட்டம் நடத்தினர்.

அடுத்தடுத்த அலட்சியங்களால் வீணாக போனது இரண்டு சிறுமிகளின் உயிர்கள் என்பது வேதனைப்பட வேண்டிய செய்தி மட்டுமல்ல நாட்டின் நிலை பற்றி வெட்கப்பட வேண்டிய செய்தியும் கூட.

உலகச்செய்திகள்