இலங்கையில் இடம்பெறும் ஊழல் மோசடிகள் தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றம் தலையீடு

இலங்கையில் இடம்பெறும் ஊழல் மோசடிகள் தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு உரிய தீர்வு பெற்றுக்கொடுக்கப்படுமென இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

பர்பச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜூன் அலோசியஸிடம் பணம் பெற்றுக்கொண்டவர்கள் தொடர்பிலும் மத்திய வங்கியில் இடம்பெற்ற நிதிமோசடி தொடர்பிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையென கொழும்பில் அமைந்துள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தில் தேசிய சுயதொழில் கூட்டமைப்பின் தலைவர் சுனில் ஜயரத்ன நேற்று முறைப்பாட்டு கடிதமொன்றை கையளித்துள்ளார்.

இதன்போது பிரித்தானிய உயர்ஸ்தானிகர் மேற்குறித்த உறுதிமொழியை வழங்கியதாக சுனில் ஜயரத்ன மேலும் தெரிவித்தார்.

ஊழல் மோசடிகளை இல்லாதொழிப்பது தொடர்பில் அரசாங்கத்துடன் பல தடவைகள் பேசியுள்ளதாகவும், ஊழலை ஒழிக்க பிரித்தானியா சார்பில் பெருமளவு பணத்தை ஒதுக்கியுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டதாக சுனில் ஜயரத்ன சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இனிவரும் காலத்தில் இவ்வாறான பிரச்சினைகள் தொடர்பாக பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தில் மக்களை முறைப்பாடு செய்யுமாறும், இலங்கைக்கு பொருத்தமான முறையில் அவை குறித்து தீர்மானங்கள் எடுக்கப்படும் என்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டதாக தேசிய சுயதொழில் கூட்டமைப்பின் தலைவர் சுனில் ஜயரத்ன மேலும் தெரிவித்தார்.

உலகச்செய்திகள்