அடுத்தடுத்து பல்வேறு திருப்புமுனைகளைச் சந்தித்து வரும் தென்னிலங்கை அரசியல்

அடுத்தடுத்து பல்வேறு திருப்புமுனைகளைச் சந்தித்து வரும் தென்னிலங்கை அரசியல் நகர்வுகளில் திடீர் திருப்பமாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு ஒன்றிணைந்த கூட்டு எதிரணித் தரப்பிலும் பிளவுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதி சபாநாயகர் பொறுப்பிலிருந்து திலங்க சுமதிபால விலகியதை தொடர்ந்து, அப்பதவியில் வெற்றிடத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட இருவரில் யாருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற விடயத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே இந்த பிளவு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

பிரதி சபாநாயகர் பதவிக்காக, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் சுதர்ஷினி பர்னாண்டோபுள்ளேவும், ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் ஆனந்த குமாரசிறியும் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவரை தெரிவுசெய்வதற்காக இரகசிய வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது.

இதன்போது, வாக்கெடுப்பிற்கு முன்னர் மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய தேசிய கட்சி பரிந்துரைத்தவருக்கு தாம் ஆதரவு வழங்கக் கூடாது என கூட்டு எதிரணித் தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி பரிந்துரைத்தவரை தோல்வியடைய செய்ய வேண்டியது தமது தரப்பிற்கு அரசியல் சார்ந்த வெற்றி எனவும் மஹிந்த சுட்டிக்காட்டியுள்ளார்.

 எனினும் கூட்டு எதிரணி தரப்பில் சிலர் சுதர்ஷினி பர்னாண்டோவிற்கு தம்மால் ஆதரவு வழங்க முடியாது எனத் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அதனைத் தொடர்ந்து, பிரதி சபாநாயகர் தெரிவிற்காக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் கூட்டு எதிரணியைச் சார்ந்த 15 பேர் அதில் கலந்து கொள்ளாமல் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேபோன்று, இந்த கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து இன்று (புதன்கிழமை) இடம்பெறவுள்ள கூட்டு எதிரணியின் முக்கிய கூட்டத்தினை தினேஸ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவங்ச, உதய கம்மன்பில ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும், மஹிந்தவின் எதிர்கால அரசியல் செயற்பாடுகளுக்கு இந்த புறக்கணிப்பும், கருத்து வேறுபாடும் தாக்கத்தினை ஏற்படுத்தும் என குறிப்பிடப்படுவதோடு, இது வரையில் மஹிந்த பக்கம் இருந்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவுகளை வழங்கவுள்ளார்களா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இரகசிய வாக்கெடுப்பில் ஆனந்த குமாரசிறிக்கு 93 வாக்குகளும், சுதர்ஷினி பர்னாண்டோபுள்ளே 57 வாக்குகளும் கிடைத்த நிலையில் நாடாளுமன்ற பிரதி சபாநாயகராக ஐக்கிய தேசிய கட்சியின் ஆனந்த குமாரசிறி பெரும்பான்மை வாக்குகளுடன் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Allgemein