கோத்தபாயவின் சொகுசு மாளிகை சிக்கியது

கதிர்காமம் மாணிக்க கங்கை வனப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட ஆடம்பர வீடு மற்றும் ஹோட்டல்கள் சட்டவிரோதமானவையென தெரியவந்துள்ளது. இதில் ஒரு சொகுசு வீடு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாயவிற்கு சொந்தமாகும்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷவின் பெயரில் நிர்மாணிக்கப்பட்ட இந்த சொகுசு வீடு கதிர்காமம் டிப்போ வீதி வனராஜ பிளேஸ் எனும் முகவரியைக் கொண்டது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியிலேயே இந்த வீடு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. நீர்ப்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான மாணிக்க கங்கை வனப்பகுதியில் இவ்வீடு நிர்மாணிக்கப்பட்டுள்ளதை அவதானிக்கலாம்.
தனது பெயரில் எவ்வித சொத்தும் இல்லையென தெரிவித்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ சுற்றாடல் விதிமுறைகளை மீறி இப்பகுதியில் தமது அதிகாரத்தை பயன்படுத்தியே இவ்வீட்டை நிர்மாணித்துள்ளார் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. சுற்றாடல் விதிமுறைகளை அடியோடு புறக்கணித்து மாணிக்க கங்கைக்கு செல்லும் வகையில் படிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
கோட்டாபாய ராஜபக்ஷவின் பெயரில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் வழங்கப்பட்டுள்ள கட்டண சிட்டையில் இவ்வீடு அவருக்குரியதென நிரூபணமாகியது. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் நாட்டுக்கு சொல்வதொன்று செய்வது வேறொன்று என்பது இதன் மூலம் நாட்டு மக்களுக்கு புரிந்துள்ளது. ‘ஊருக்குதான் உபதேசம் உனக்கல்ல மகளே’ என்ற பழமொழிதான் மக்களுக்கு ஞாபகம் வருகிறது. கதிர்காம மாணிக்க கங்கையில் அருகில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டிடங்களின் நிலையும் இதுதான். இந்த சட்டவிரோத கட்டிடங்கள் தொடர்பில் நாம் கதிர்காம நீர்ப்பாசன பொறியிலாளர் எச்.எம்.கே.இ ரத்நாயக்கவை தொடர்பு கொண்டு விசாரித்தோம். இவ்விடயம் தொடர்பில் அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
நீர்ப்பாசன விதிமுறைகளின் பிரகாரம் ஆற்றங்கரையிலிருந்து ஆகக்குறைந்தது 60 மீற்றர் எல்லைக்குள் கட்டிடங்கள் நிர்மாணிக்கப்படுவது சட்டவிரோதமாகும். நாட்டிற்கு நீதியைப் போதிப்பவர்கள் தமக்கு தேவையான வகையில் சட்டத்தை வளைத்துள்ளனர்.
கதிர்காம பிரதேச செயலாளர் எஸ்.ஈ. வீரகோனிடம் இது தொடர்பாக விசாரித்த போது செல்ல கதிர்காமம் முதல் நாகஹ வீதிவரை மாணிக்க கங்கை கரையோரத்தில் சட்டவிரோத கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
நீர்ப்பாசன திணைக்களத்திற்கே இதற்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்கும் உரிமை இருப்பதாக அவர் கூறினார். கதிர்காம நகரை அண்டிய பகுதியில் கடந்த ஆட்சியில் அரசியல் வாதிகளால் தன்னிச்சை போக்கில் நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்களை அகற்றுவது இடியப்ப சிக்கலுக்கு ஒப்பானதாகும்.
வழக்குத் தாக்கல் செய்தாலும் கூட தீர்ப்பு வருவதற்கு ஆகக்குறைந்தது 3 வருடங்கள் ஏனும் செல்லும் என்பதால் இவர்கள் சட்டத்தின் ஓட்டை மூலம் தப்பிச்செல்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். அதனால் சட்ட அமைப்புகளும் தமது கையை சுட்டுக்கொள்ளாத வகையிலேயே நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.
இந்த சட்டவிரோத கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு யாராவது அனுமதி கொடுத்திருந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும். யார் அனுமதி கொடுத்தது? எதன் அடிப்படையில் கொடுத்தார்கள்? அந்த செயலாளர். இந்த செயலாளர் என்பதெல்லாம் முக்கியமல்ல. ஒன்று அதிகாரிகளுக்கு பயப்படுகின்றனர். அல்லது குறித்த நபருக்கு அஞ்சுகின்றனர். அதிகாரிகள் நேரடியாக நடவடிக்கையடுப்பதற்கு அரசியல் வாதிகள் அனுமதி வழங்கினால் இதுபோன்ற பிரச்சினைகள் எதிர்காலத்தில் ஏற்படாது, அவ்வாறு இல்லாவிட்டால் எதிர்காலத்திலும் இவ்வாறான கட்டிடங்கள் உருவாகும். நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் அகற்றப்பட வேண்டும் இதுதான் எமது தேவை என கிரிவிகாரை ரஜமஹா விகாரை தலைமை தேரர் சங்கைக்குரிய தலகல ஞாநிந்த தேரர் என தெரிவித்தார்.
கதிர்காம புனித நகரை ஊடறுத்து பாயும் மாணிக்க கங்கையைக் கூட தமது தேவைகளுக்காக பயன்படுத்திக்கொள்ளும் இது போல நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவேண்டுமென்பதே அநேகமானோரின் கருத்தாகும். இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமக்கு ஏற்படும் நிலையை நன்றாக அறிந்து வைத்துள்ளதால்தான் அதிகாரிகள் கூட இவற்றை தடுப்பதற்கு தயக்கம் காட்டுகின்றனர். தனது பசியை போக்குவதற்காக மாம்பழம் ஒன்றை திருடிய நபருக்கு சிறைத்தண்டனை வழங்கும் இந்த நாட்டில் இது போன்ற ஊழல் பேர்வழிகளுக்கு எதிராக சட்டம் நடவடிக்கை எடுக்க தயங்குவது பொதுமக்களுக்குள்ள பெரும் பிரச்சினையாகும். இப்போதாவது அதிகாரிகள் இதுபோன்ற நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவேண்டுமல்லாவா?