வடமாகாண கல்வி அமைச்சர் 4ம் மாடிக்கு விசாரணைக்கு அழைப்பு!

வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சர் க.பரமேஸ்வரன் என்பவரை இலங்கை அரச பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் தேடி அலைவது தெரியவந்துள்ளது.


கொழும்பில் காவல்துறை தலைமையகம் அமைந்துள்ள 4ம் மாடிக்கு விசாரணையொன்றிற்கு சமூகமளிக்க அழைப்புவிடுக்கவே அவரை தேடி அலைவது தெரியவந்துள்ளது.

இன்றைய தினமான செவ்வாய்கிழமை வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சின் அலுவலகத்திற்குஇலங்கை அரச பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவின் உறுப்பினர்கள் இருவர் வருகை தந்துள்ளனர்.

அவர்கள் கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சர் க.பரமேஸ்வரனை எதிர்வரும் ஜீன் மாதம் 5ம் திகதி கொழும்பு காவல்துறை தலைமையகத்திற்கு விசாரணைக்கு வருகை தர அழைக்கும் அழைப்பாணையுடன் வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

எனினும் கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சர் க.பரமேஸ்வரன் என எவருமில்லையென தெரிவித்த அமைச்சின் அதிகாரிகள் கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி.க.சர்வேஸ்வரனை சந்திக்க அவர்களிற்கு அனுமதித்துள்ளனர்.

எவரது ஒப்பமும் அற்ற வெறுமனே கைகளால் எழுதப்பட்டு யாரால் எழுதப்பட்டது அல்லது யாருக்கு எழுதப்பட்டதென்ற எந்தவொரு தகவலுமற்றதாக போட்டோபிரதி எடுக்கப்பட்ட ஆவணமொன்றை கையளித்த அவர்கள் விசாரணையொன்றிற்காக கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி.க.சர்வேஸ்வரனை கொழும்பு காவல்துறை தலைமையகத்திற்கு விசாரணைக்கு வருகை தர அழைப்புவிடுத்திருந்தனர்.

எனினும் மொட்டைக்கடிதப் பாணியில் அமைந்திருந்த குறித்த கடிதத்தை ஏற்க மறுத்த அவர் எதிர்வரும் ஜீன் 5ம் திகதி முதல் 14ம் திகதி வரை ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் தனக்கு அவ்வாறு சமூகமளிக்க நேரமில்லையெனவும் தெரிவித்துள்ளார்.

வடமாகாண கல்வி அமைச்சரிடமே மொட்டைக்கடித அழைப்பாணையுடன் வருகை தரும் இலங்கை அரச பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் சாதாரண பொதுமக்களுடன் எவ்வாறு கையாளுவர் என்பது குறித்து தனக்கு சந்தேகமிருப்பதாக கலாநிதி.க.சர்வேஸ்வரன் தெரிவித்தார்.

அத்துடன் இப்பிரிவினர் சட்டரீதியாக உத்தியோகபூர்வமாக கடிதங்களை கையாளது மொட்டைக்கடித பாணியில் அனுப்பிவைப்பதும் எதற்காகவெனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Allgemein