விடுதலைப் புலிகளுக்கு எதிராக பிரித்தானியாவின் கறைபடிந்த பக்கங்கள்!

இலங்கையின் உள் நாட்டுப் போரின்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் வளர்ச்சிக் காலத்தில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு தொடர்பான ஆவணங்களை உள்ளடக்கிய 195 கோப்புகளும், பிரித்தானிய வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலகத்தில் (FCO) வைத்து அழிக்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இது போரியல் தொடர்பான ஆராய்ச்சியாளர்களுக்கு அக்கறையைத் தூண்டிய விடயமாக காணப்படுகிறது.
இந்த தகவலை இந்தியாவிலிருந்து வெளியாகும் Press Trust of India (PTI) வெளியிட்டுள்ளது.
குறிப்பாக 1978-1980 காலத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்றம்பெற்றுக்கொண்டிருந்தபோது அவர்களின் நெருக்கடியைத் தடுக்குமுகமாக பிரித்தானிய சிறப்புப் படைப் பிரிவுகளான MI5 மற்றும் விசேட விமான சேவை (SAS) ஆகியன இணைந்து ஸ்ரீ லங்கா பாதுகாப்புப் படைகளுக்கு ஆலோசனை கூறியதாக குறித்த ஆவணங்களில் கூறப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுளது.
அப்போது தமிழ் புலிகள் என்ற பெயரில் இயங்கிய உள்நாட்டு கிளர்ச்சிக் குழுவினை முற்றாக ஒடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை பிரித்தானிய பாதுகாப்புத் தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கும் ஆவணங்களே இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளன.
உண்மையில் இந்த ஆவணங்கள் தமது நாட்டுக் கொள்கை அடிப்படையில் அவசியமற்றவை என்றும் முக்கியமான ஒரு வரலாற்று ஆவணப்படுத்தல் இல்லை என்ற அடிப்படையிலுமேயே அவை அழிக்கப்பட்டதாக பிரித்தானிய வெளி உறவு மற்றும் பொது நலவாய அலுவலகம் கூறியது.
“அவர்களால் அழிக்கப்பட்ட இரண்டு ஆவணங்கள் 1979-1980 இலிருந்து ‘இலங்கை இந்தியா உறவுகள்’ என்று அழைக்கப்பட்டன,” என பத்திரிகையாளரும் ஆராய்ச்சியாளருமான பில் மில்லர் கூறியதுடன், தகவல் அறியும் உரிமைக் கோரிக்கையின் ஒரு பகுதியாக காணாமல் போன கோப்புக்களை அவர் கண்டுபிடித்துள்ளார்.
இந்திய அமைதி காக்கும் படை (IPKF) பணியின்போது, ​​தீவு நாடுகளுடன் இந்தியாவின் உறவு பற்றிய குறிப்புகளை இந்த ஆவணங்கள் கொண்டுள்ளன என எதிர்பார்க்கப்படுகிறது.
“தேசிய ஆவணக்காப்பகத்தில் பொது காவலில் இருக்கும் வரலாற்று ஆவணங்களை அகற்றுவது அல்லது அழிப்பது நம் அனைவரையும் காயப்படுத்தும் செயல் என்பதோடு இது ஒரு சட்டத்திற்குப் புறம்பான செயலாகும்” என்று தமிழ் தகவல் மையத்தின் நிறுவனர் வைரமுத்து வரதகுமார் கூறினார்.
தமிழ் தகவல் மையம் 1981 இல் சுயாதீனமான சமூகம் சார்ந்த இலாப நோக்கற்ற அமைப்பாக பதிவு செய்யப்பட்டது. தமிழ் மொழி பேசும் மக்களுக்கு அறிவையும், மற்ற திட்டங்களையும் அணுகுவதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான முயற்சியை மேற்கொள்கிறது.
“ஸ்ரீ லங்கா பாதுகாப்புப் படையினருக்கு பிரித்தானியாவின் இந்த படைப் பிரிவுகள் பயிற்சியளித்த விடயத்தை மூடிமறைக்கும் நோக்கில் அந்த அலுவலகத்தின் நடவடிக்கை அமைந்துள்ளதாக குறிப்பிடும் வரதகுமார் அது தனது அரசாங்கத்தின் மகத்துவத்திற்கு சங்கடமாக இருக்கும் என்பதனாலேயே அழிக்கப்பட்டதாக கூறுகின்றார்.
“இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் வரலாறு, அரசியல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக ஆய்வாளர்களிடையே ஆர்வம் அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக இது இளம் தலைமுறையினரிடம்தான் அதிகமாக காணப்படுவதாக தாம் சமீபத்தில் கண்டறிந்ததாக அவர் குறிப்பிட்டார். அந்த வகையில் தேசிய ஆவணக்காப்பகம், நூலகங்கள் மற்றும் ஆவண மையங்கள் போன்ற நினைவுப் பகுதிகளின் இந்த நடவடிக்கை காணப்படுகின்றன என்பதே அவரது கருத்தாக அமைகின்றது.
1987 ல் தமிழ் தகவல் மையத்திற்கு சொந்தமான ஆவணங்களை இந்திய அதிகாரிகள் கைப்பற்றியதாகவும் வரதகுமார் இவ்விடத்தில் கூறுகிறார்.
“தமிழ் தகவல் மையத்திற்கு 1984 முதல் 1987 வரை மதுரை மற்றும் சென்னை ஆகியவற்றில் இரண்டு கிளைகள் இருந்தன. இந்திய அதிகாரிகள், ஸ்ரீலங்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் ஒரு சமாதான உடன்படிக்கை கையெழுத்திட்டுள்ளதாக கூறியதுடன், எங்களது கிளைகளை முடிவிடுமாறும் அனைத்துப் பொருட்களையும் திருகோணமலைக்கு கொண்டுசெல்வதற்கு போக்குவரத்து ஒழுங்குகளை மேற்கொண்டு தருவதாகவும் கூறினார்கள். ஆனாலும் அது நடக்கவில்லை.” என்றார் வரதகுமார். வரதகுமார் இலங்கையின் வடக்கு மாகாணத்திலிருந்து லண்டனில் உள்ளவராவார்.
1981 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தால் எரிக்கப்பட்ட யாழ்ப்பாண நூலகத்தின் எரிந்த தகவல்கள் தொடர்பான விடயங்களும், 1989இல் அழிந்த யாழ்ப்பாண அருங்காட்சியகத்தில், யாழ்ப்பாணத்தின் பனை-இலை கையெழுத்துப் பிரதிகள் மற்றும் பண்டைய ஆவணங்கள் என்பனவும் பிருத்தானிய வெளியுறவு மற்றும் பொது நலவாய அலுவலகம் அழித்த ஆவணங்களில் உள்ளடங்கியிருந்ததாக அவர் கூறுகின்றார்.
பிரித்தானிய வெளியுறவு மற்றும் பொது நலவாய அலுவலகம் அந்த கோப்புகளின் தலைப்புகள் பட்டியலை வைத்திருந்தது. அதில், பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் ஆயுத விற்பனையிலிருந்து, வெளிநாட்டு உதவி மற்றும் இங்கிலாந்தில் தஞ்சம் கோருவதற்கான கோரிக்கைகள் ஆகியவற்றைக் கொண்ட கோப்புக்களே அழிக்கப்பட்டன.
இது தொடர்பாக பிரித்தானிய வெளியுறவு மற்றும் பொது நலவாய அலுவலகத்தின் பேச்சாளர்களில் ஒருவர் கூறியதாவது, “நாட்டின் அனைத்து அரசாங்கத் துறைகளிலும், நிரந்தர பாதுகாப்பு பற்றிய முடிவை எடுப்பதற்கு முன்னர், பொது பதிவுகள் சட்டத்தின் தேவைகளுக்கு ஏற்ப அனைத்து கோப்புகளையும் மதிப்பாய்வு செய்கிறது. இதன் பின்னரே அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது” என்றார்.
எவ்வாறாயினும் இலங்கையின் உள் நாட்டுப் போரிலே பிரித்தானியாவின் பங்களிப்பு என்பது தொடக்க காலத்தில் அதிகமாகக் காணப்பட்டது என்றே பல போரியல் ஆய்வாளர்களும் உறுதியாகக் கூறிவருகின்றனர். குறிப்பாக பிரித்தானியாவின் விசேட வான் சேவைப் படைப்பிரிவால் பயிற்சி அளித்து உருவாக்கப்பட்ட இலங்கையின் விசேட அதிரடிப்படை (STF).
ஸ்ரீ லங்காவின் விசேட அதிரடிப் படையானது பிரித்தானியாவின் விசேட வான் சேவை பிரிவினால் (SAS) பயிற்சியளித்து உருவாக்கப்பட்டதாகும். இராணுவ கட்டமைப்பிற்குள் வராத இந்த விசேட அதிரடிப் படை பொலிஸ் சேவையின் அதி உயர்ந்த படைப் பிரிவாகும். இதன் உருவாக்க நோக்கம் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தமிழ் போராட்ட குழுக்களை தாக்கி அழிப்பதே. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் விசேட அதிரடிப்படையின் ஆரம்ப இயக்கம் காணப்பட்டது. இதுகூட 1983ஆம் ஆண்டுதான் தனது முதலாவது சேவையினை ஆரம்பித்தது.
இலங்கை போரியல் வரலாற்றில் ஆரம்பத்தில் இலங்கைக்கு பல போர் உதவிகளைச் செய்த பிரித்தானியா தனது இந்த போருக்கான உதவிகள் குறித்த தடயங்களை மறைப்பதற்காகவே மேற்கூறிய ஆவணங்களை அழித்தது என்பதே முடிவாகின்றது. தான் செய்த கறைபடிந்த செயல்களை மிக சூசகமாக மூடிமறைக்கும் பிரித்தானியாவின் இந்த செயலானது வரலாற்றிலிருந்து அவ்வளவு எளிதில் கரைந்துவிடப்போவதில்லை!

Allgemein