மே 28: செவ்வாயில் தரையிறங்கிய மார்ஸ் 3 ரஷ்ய விண்கலம் ஏவப்பட்டது!

நமது சூரியக் குடும்பத்தில் சூரியனிலிருந்து நான்காவதாக இருக்கும் கிரகம் செவ்வாய்.
அதன் மேற்பரப்பில் இரும்பு ஆக்சைடு இருப்பதால், அது சிவப்பாக இருக்கிறது. பூமியைப் போல எரிமலைகள், பள்ளத்தாக்குகள், பாலைவனங்கள் மற்றும் சூரியக் குடும்பத்தில் உள்ள இரண்டாவது பெரிய மலை ஆகியவை இந்த சிவப்புக் கிரகத்தில் உள்ளன.
பூமியும் செவ்வாயும் அருகருகே வருகிற ஒரு நிலையில், அவற்றுக்கு இடையிலான தூரம் சுமார் 5 கோடியே 60 லட்சம் கிலோ மீட்டர்.
செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்ய ரஷ்யா தொடர்ந்து பல விண்கலங்களை அனுப்பியது. செவ்வாயை விண்கலங்கள் சென்றடைய ஆகும் காலம் ஏழு மாதங்கள்.
இந்த விண்கலங்களில் செவ்வாயைச் சுற்றும் வகையில் ஒரு பகுதியும் செவ்வாயில் தரையிறங்கும் வகையில் ஒரு பகுதியும் என இரு பகுதிகள் இருந்தன.
அவற்றில் மார்ஸ் 2-ன் ஒரு பகுதி செவ்வாயில் மோதிச் செயலிழந்தது.
மார்ஸ் 3-ன் 358 கிலோ எடையுள்ள லேண்டர் பகுதிதான் 1971 டிசம்பர் 2-ம் திகதி பாராசூட் உதவியோடு மெதுவாக இறங்கியது.
முதன்முதலில் செவ்வாயில் தரையிறங்கிய விண்கலம் என்ற பெயரை அதுவே தட்டிச்சென்றது. ஆனாலும், அதன் தொலைத் தொடர்புக் கருவிகள் 14 நிமிடங்களே இயங்கின.
செவ்வாய் கிரகத்தைச் சுற்றிய விண்கலங்களின் பகுதிகள் தந்த விவரங்கள் செவ்வாயைப் புரிந்து கொள்ள உதவின. அதன் பிறகும் மார்ஸ் 4, 5, 6 ,7 என வரிசையாக விண்கலங்கள் அனுப்பப்பட்டன.
செவ்வாயில் மார்ஸ் 3 இன் பாகங்கள் நொறுங்கிக் கிடப்பதை அமெரிக்க நாசா விண்வெளி நிலையம் 2013 இல் அறிவித்தது.

Allgemein