யாழ்ப்பாணம் செல்வதாக தெரிவித்து விட்டு சென்ற இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்!

வவுனியா – ஓமந்தை பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய இளைஞரொருவர் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து மோட்டார் சைக்கிளுடன் டிப்பர் வாகனமொன்று மோதியதாலேயே நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் இளைஞரின் கால் ஒன்று துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், துண்டிக்கப்பட்ட காலினை பொலிஸார் 15 நிமிடங்களின் பின்னர் வைத்தியசாலைக்கு எடுத்து சென்று ஒப்படைத்துள்ளனர்.
செட்டிகுளம் பகுதியில் 2ஆம் படிவத்தில் வசித்துவரும் பாலசுந்தரம் நிரோசன் எனும் 22 வயது இளைஞரே யாழ்ப்பாணம் செல்வதாகத் தெரிவித்துவிட்டு சென்ற போது ஓமந்தையில் வைத்து விபத்தில் சிக்கியுள்ளார்.
இந்த நிலையில் டிப்பர் வாகனம் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை சாம்பல் தோட்டத்தில் மோட்டார்சைக்கிளில் சென்ற எஸ்.வாணதி என்ற 40 வயது குடும்பப்பெண் ஒருவரை பின்னால் சென்ற ஹயெஸ் வான் மோதியதில் அவரின் தலையில் படுகாயம் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.