முள்ளிவாக்கால் கருமேகங்கள் சூழ்ந்ததால்-இலங்கையில் வெள்ளம், மண்சரிவு: 22 பேர் பலி

இலங்கையின் 21 மாவட்டங்களில் கடந்த ஒருவார காலமாக பெய்த மழையினால் 153,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர் மழையினால் பல மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. ஆங்காங்கே மண் சரிவு அபாயங்களும் விடுக்கப்பட்டுள்ளன.
தற்போது ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தத்தின் பாதிப்புக்கள் குறையும் வரை அனைத்து மாவட்ட, பிரதேச செயலகங்களின் அரச அதிகாரிகளின் விடுமுறைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக சுதேச சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. நிவாரண உதவிகளை தங்குதடையின்றி வழங்குவதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சின் மேலதிக செயலாளர் எஸ்.என். சில்வா
பலத்த மழை, வெள்ளத்தினால் இதுவரை 22 உயிர்கள் பலியாகியுள்ளன. 40,017 குடும்பங்ளைச் சேர்ந்த 1,53,712 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருவர் காணாமல் போயுள்ளனர். 55,000க்கு மேற்பட்ட மக்கள் 265 தற்காலிக நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதால் தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் பாதுகாப்புக் காரணங்களுக்காக ஆங்காங்கே உள்ள மின் பிறப்பாக்கிகள் கடந்த சில நாட்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. மண் சரிவு, திடீர் வெள்ளம் குறித்து விழிப்புடன் இருக்குமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கையின் புத்தளம் மாவட்டத்தில் பல ஆறுகள் பெருக்கெடுத்ததால் பிரதான வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கின. இதனால்போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. மீட்புப் பணிகளில் முப்படையினர் தொடர்ந்தும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் பணிகளும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
சிலாபம், மாதம்பை என்ற பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கியிருந்த குடும்பமொன்றை மீட்கச் சென்ற போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருந்தார். அடித்துச் செல்லப்பட்ட இடத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் அவரது சடலம் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
வெள்ளம், மண்சரிவு காரணமாக இதுவரை 4,700 இற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. இவற்றில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளது
எவ்வாறாயினும், இன்று (27) முதல் மழை பொழிவு குறையக்கூடும் என வானிலை ஆய்வு மையம் இன்று (27) காலை தெரிவித்தது. எனினும், இன்றும் சில பிரதேசங்களுக்கு 75 மில்லி மீட்டர் மழை பெய்யக்கூடும் என ஆய்வு மையத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார். மன்னார் முதல் புத்தளம், கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு ஆகிய கடற்பிரதேசத்தில் 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
வெள்ளம் வழிந்தோட ஆரம்பிக்கும் போது பிரதேசங்களில் தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாகவும், இதனால் மக்களைத் தொடர்ந்து தெளிவூட்டுமாறும் சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Allgemein