செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு இராணுவ அச்சுறுத்தல்!

பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்த காணியை இராணுவத்தினர் கையகப்படுத்தும் செயற்பாடுகள் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் படையினர் தொடர்ச்சியாக கையடக்க தொலைபேசி மூலம் ஒளிப்பதிவு செய்துள்ளனர் என ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் உள்ள பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்த காணியை இராணுவத்தினர் கையகப்படுத்தும் செயற்பாடுகள் தொடர்பில் இன்று பாராளுமன்ற உறுப்பனர் சாந்தி சிறிஸ்காந்தராஜா இராணுவ அதிகாரியுடன் பேசுவதற்காக இராணுவ முகாமிற்கு சென்றிருந்தார்.
அப்போது குறித்த முகாமிற்கு பொறுப்பாக இருந்த இரண்டாம் நிலை அதிகாரி ஒருவருடன் பாராளுமன்ற உறுப்பினர் கலந்துரையாடும் காட்சியை பதிவு செய்தபோது, படையினர் இவ்வாறு தொடர்ச்சியாக ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் தமது கையடக்க தொலைபேசியில் ஒளிப்பதிவு செய்ததாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
சுமார் 15 நிமிடங்களிற்கு மேல் ஊடகவியலாளர்களை இலக்கு வைத்தே இவ்வாறு படையினர் ஒளிப்பதிவு செய்தனர்.
நல்லாட்சி அரசாங்கம் தொடர்பில் மக்கள் மத்தியில் கடந்த ஆட்சியாளர்களை விட ஒப்பீட்டடிப்படையில் வரவேற்பை பெற்றுள்ளபோதிலும், இவ்வாறு படையினர் அச்சுறுத்தும் வகையில் நடந்துகொள்கின்றமை தொடர்பில் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறித்த காணி மக்களின் பயன்பாட்டிற்காக படையினர் விடிவிக்கும் வரை, படையினரின் அச்சுறுத்தலை மீறி மக்கள் நலன் சார்ந்து தொடர்ந்தும் தாம் செயற்படுவோம் என ஊடகவியலாளர்கள் உறுதிப்பட தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, நல்லாட்சியிலும் ஊடகவியலாளர்கள் மீதான இராணுவ அச்சுறுத்தல் தொடர்ந்து வருகின்றன என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.