ஓட்டமாவடியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!

மட்டக்களப்பு ஓட்டமாவடியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இன்னொருவர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணியளவில் ஓட்டமாவடி பஸார் பள்ளிவாசலுக்கு முன்பாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன உறுதிப்படுத்தியுள்ளார்.
ஓட்டமாவடியில் மீன் சந்தையில் இருந்து ஏறாவூர் நோக்கி சென்ற உந்துருளியும், வாழைச்சேனையில் இருந்து ஓட்டமாவடிக்கு சென்ற முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நேரில் கண்டவர்கள் ஆரம்ப கட்ட விசாரணையில் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்தில் வாழைச்சேனை ஹைறாத் வீதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான முச்சக்கரவண்டி சாரதி ஏ.எல்.எம்.ஹனீபா (வயது 57) என்பவரே உயிரிழந்துள்ளதுடன், எறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மஞ்சுள (வயது 34) என்பவர் காயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.

தாயகச்செய்திகள்