பிரித்தானிய எதிர்கட்சித் தலைவர் சிறிலங்காவிற்கு கடும் எச்சரிக்கை!

தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்கள் உட்பட மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கு தொடர்ந்தும் தவறிவரும் சிறிலங்கா அரசாங்கத்திற்கு பிரித்தானியாவின் பிரதான எதிர்கட்சியான தொழிற் கட்சியின் தலைவர் ஜெரமி கோபின் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழினப் படுகொலையின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக கருதப்படும் முள்ளிவாய்க்கால் கொடூரத்தின் ஒன்பதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்றைய தினம் பிரித்தானிய தொழிற் கட்சியின் தமிழர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரித்தானிய எதிர்கட்சித் தலைவர் ஜெரமி கோபின் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

பிரித்தானிய பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்றைய தினம் மாலை 6.30 முதல் இரவு 8.30 வரை இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த விசேட கலந்துரையாடலில் எதிர்கட்சித் தலைவர் ஜெரமி கோபினுடன், நிழல் வெளிவிவகா அமைச்சர் உள்ளிட்ட தொழிற் கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இவர்கள் முன்னிலையில் உரையாற்றிய எதிர்கட்சித் தலைவர் ஜெரமி கோபின்….
இலங்கையில் நடைமுறையிலுள்ள மிகவும் மோசமான சட்டமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக இரத்துச் செய்து தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கத்திடம் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாகக் குறிப்பிட்டார்.
அதேவேளை இராணுவம் உட்பட சிறிலங்கா அரச படையினர் பலவந்தமாக கையகப்படுத்தி வைத்துள்ள பொது மக்களின் காணிகளை விடுவிப்பதுடன் தமிழ் தாயகத்தில் தொடரும் இராணுவ மயமாக்கல் முடிவுக்கு கொண்டவரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

யுத்தத்தின் போது இடம்பெற்ற மிகவும் மோசமான படுகொலைகள், சித்திரவதைகள் உட்பட சர்வதேச சட்டங்களை அப்பட்டமாக மீறிய சம்பவங்கள் மற்றும் மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதி நிலைநாட்டப்பட வேண்டியதன் அவசியத்தையும் கோபின் வலியுறுத்தினார்.
பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தி நீதி நிலைநாட்டப்படாது விட்டால் தொடர்ந்தும் மோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெறும் என்றும் பிரித்தானிய எதிர்கட்சித் தலைவர் சிறிலங்கா அரசை எச்சரித்தார்.
அதேவேளை மனித உரிமை மீறல்களுக்கான நீதியை வலியுறுத்துவதற்காக பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூன் யாழ்ப்பாணத்திற்கு சென்றது போல் இல்லாமல் தொழிற் கட்சி ஆட்சிபீடம் ஏறியதும் பிரித்தானிய இராஜதந்திரிகள் உட்பட அதிகாரிகளை ஒரு இடத்திற்கு மாத்திரமன்றி மனித உரிமை மீறல்கள் இடம்பெறும் அனைத்து இடங்களுக்கும் அனுப்பி வைத்து அவற்றுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்காக ஹேக்கிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை விட மெலதிகமாக நடவடிக்கை எடுக்க வேண்டுமாயின் அதற்கும் தொழிற்கட்சி நடவடிக்கை எடுக்கும் என்றும் ஜெரமி கோபின் தெரிவித்தார்.
அதுமாத்திரமன்றி தொழிற்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் தமிழ் மக்களுக்கான உரிமைகளையும், நீதியையும் உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கைகளை உள்ளடக்குவதாகவும் தொழில்கட்சியின் தலைவர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் வாக்குறுதி அளித்தார்.

தாயகச்செய்திகள்