சாவகச்சேரி பொதுச்சந்தையில் படுகொலையின் நினைவாக நினைவுத்தூபி!

யாழ்ப்பாணம் தென்மர் ஆட்சி, சாவகச்சேரி பொதுச்சந்தையில் நினைவுத் தூபி ஒன்று அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி படுகொலை உள்ளிட்ட கடந்த காலங்களின் பல்வேறு சந்தர்ப்பங்களில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களில் கொல்லப்பட்ட பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் நினைவாகவே இந்த தூபி அமைக்கப்படவுள்ளது.
தமிழ் இனப்படுகொலை நினைவு வாரத்தின் மூன்றாம் நாள் அஞ்சலி நிகழ்வுகள், நேற்று முன்தினம் மாலை சாவகச்சேரி சந்தையில் இடம்பெற்றது. இதன்போது உரை நிகழ்த்திய சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் அ.பாலமயூரன் நினைவுத்தூபி அமைக்கப்படும் எனத்தெரிவித்தார்.
சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் தலைவர் திருமதி சிவமங்கை இராமநாதனின் கருத்திட்டத்துக்கு அமைவாகவே இந்த நினைவுத்தூபி அமைக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.
இதற்காக பொருத்தமான இடம் ஒன்றை தெரிவு செய்வதற்கு தவிசாளர் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளார். அதனைத்தொடர்ந்து உரிய அனுமதிகளுடன் பொதுமக்களின் பங்களிப்புடன் நினைவுத்தூபி வெகுவிரைவில் அமைக்கப்படும் எனத்தெரிவித்தார்.
1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 27ஆம் நாள் சூரன்போர் தினத்தன்று சாவகச்சேரி பொதுச் சந்தையில் மிகப்பெரிய இனப்படுகொலை ஒன்று இந்திய இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்தியப் படைகளின் உலங்கு வானூர்தி மூலம் நடத்தப்பட்ட ரொக்கட் தாக்குதலில் 68 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இது சாவகச்சேரி படுகொலை என பெயரிடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

தாயகச்செய்திகள்