திவயின ஊடகவியலாளர் கைது!

ஊடகவியலாளர் உபாலி தென்னக்கோன் கடத்தல் வழக்கின் சந்தேகநபரின் ஒளிப்படத்தை பிரசுரித்தமை தொடர்பாக, திவயின சிங்கள நாளிதழின் ஊடகவியலாளர் சமன் கமகே கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் ரிவிர இதழின் ஆசிரியர் உபாலி தென்னக்கோன் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்திய ஒளிப்படம் திவயின மற்றும் இணையத்தளங்களில் வெளியானமை குறித்து விசாரிக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு, கம்பகா நீதிமன்ற நீதிவானாக இருந்த கவீந்திர நாணயக்கார உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து, 2016 செப்ரெம்பர் 09 ஆம் நாள் திவயின ஊடகவியலாளர் சமன் கமகே விசாரணைக்கு முன்னிலையாகியிருந்தார். அதற்குப் பின்னர் அவர் விசாரணைகளுக்கு முன்னிலையாகவில்லை.
சமன் கமகே விசாரணைக்கு முன்னிலையாகாத நிலையில் அதுபற்றி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்குநீதிமன்றத்துக்குத் தெரியப்படுத்தியிருந்தனர்.
இதையடுத்து, நேற்றுமுன்தினம் இரவு அவரைக் கைது செய்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர், நேற்று கம்பகா நீதிமன்றத்தில் நிறுத்தினர்.
அவரை பிணையில் செல்ல அனுமதித்த நீதிவான், ஜூன் 29ஆம் நாள் மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவிட்டார்.

Allgemein