ஸ்ரீலங்காவின் இளம் விஞ்ஞானிகள் நான்கு பேர் அமெரிக்கா பயணம்!


அமெரிக்காவின் இன்டல் நிறுவனத்தின் விஞ்ஞான மற்றும் பொறியியல் கண்காட்சியில் கலந்து கொள்வதற்கு ஸ்ரீலங்கா பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட்ட இளம் விஞ்ஞானிகள் நான்கு பேர் அமெரிக்கா பயணமாகவுள்ளனா்.
இவர்களுக்கான பயணச்சீட்டு கல்வி அமைச்சின் மூலமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது. கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் இன்று (09.05.2018) காலை பயணச்சீட்டுகளை கல்வி இராஜாங்க அமைச்சின் காரியாலயத்தில் வைத்து வழங்கி வைத்தார்.
அமெரிக்காவின் இன்டல் நிறுவனத்தின் விஞ்ஞான மற்றும் பொறியியல் கண்காட்சி எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் 18ஆம் திகதிவரை பெனின்சுலா நகரில் நடைபெறவுள்ளது. இந்த கண்காட்சியில் சர்வதேச ரீதியாக 72 நாடுகளை சோ்ந்த ஆயிரத்து 700 மாணவர்கள் கலந்து கொள்கின்றார்கள்.
2007ம் ஆண்டு முதல் ஸ்ரீலங்கா மாணவர்கள் தொடா்ச்சியாக இந்த கண்காட்சியில் கலந்து கொள்வதுடன் இதன்போது அவர்கள் அங்கு நடைபெறுகின்ற போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார்கள்.
ஸ்ரீலங்கா பொறியியலாளர் கல்வியகம் வருடந்தோறும் தேசிய மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 20 மாணவர்களை தெரிவு செய்து இரண்டு கட்டமாக போட்டிகளை நடாத்துகின்றன. இந்த போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெறுகின்ற மாணவர்கள் வருடந்தோறும் அமெரிக்காவில் நடைபெறுகின்ற கண்காட்சியில் கலந்து கொள்வதற்கு தெரிவு செய்யப்படுகின்றார்கள்.
அதன் அடிப்படையிலேயே கிம்ஹான் விஜேவர்தன (சென் அன்தனிஸ் கல்லூரி கண்டி) கஜிந்து பண்டார (சென் அன்தனிஸ் கல்லூரி கண்டி) சுபுன்சில்வா (டெமகினோன் கல்லூரி கந்தானை) ருமல் இந்துவர (ஆனந்த தேசிய கல்லூரி புத்தளம்) ஆகிய நான்கு மாணவர்களே இந்நிகழ்விற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
இவர்கள் அனைவரும் எதிர்வரும் 12.05.2018 அன்று ஸ்ரீலங்காவில் இருந்து பயணமாகும் நிலையில் கண்காட்சி தொடர்ந்து ஜந்து நாட்களுக்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.