புலம்பெயர் பெருமைகளே…. வாருங்கள் !!!

பெயர் பொறித்த உடை அணிந்து
பெருமையுடன் பிறமொழி பேசி
பெருமிடுக்குடன் நடைபோடும்
புலம்பெயர் பெருமைகளே….
வாருங்கள் !!!
இளைப்பாற ஒருதுளி நேரமின்றி
இருவேலைகள் செய்து சேர்த்த பணத்தை
குற்றம் செய்த தலைமகனுக்காய்
அபராதமாய்க் கட்டும் அப்பன்களே….
வாருங்கள் !!!
தேசத்துக்காய் சேர்த்த செல்வத்தை
வேசம் விலக்கி சொந்தம் கொண்டாடி
தூசாய்ச் செலவழித்து சுகம் காணும்
துரோகச் சகோதரர்களே…
வாருங்கள் !!!
வெள்ளையும் சுள்ளையுமாய்
வெளிநாட்டில் இருந்து சென்று
கைபேசியை வேட்டிக்குள் சொருகிக்கொண்டு
தேரிழுக்கும் தேசபக்தர்களே….
வாருங்கள் !!!
தலைநகரில் நான் தான் எல்லாம் என்று
தம்பட்டம் அடித்துக் கொண்டு
பிறந்த ஊருக்கும் போகாமல் அடம்பிடிக்கும்
வசதி படைத்த பெருமுதலாளிகளே…
வாருங்கள் !!!
மாவீரர்களின் தியாகம் மறந்து
மானங்கெட்ட பிழைப்புகள் செய்யும்
மண்வாழ் பகட்டுக் கெளரவங்களான
மகராசன்களே,மகராசிகளே…
வாருங்கள் !!!
உங்களது ஒன்றும்
எங்களுக்கு வேண்டாம்….
கூடப் பிறந்த குற்றத்திற்காகவாவது
குலமிழந்த நாட்களை நினைத்து
உங்கள் பட்டியலில் இல்லாதவரோடு சேர்ந்து
கூடி எம்மோடு அழுது செல்லவாவது
ஒருமுறை வாருங்கள்…..
வாருங்கள் !!!!
மறக்காமல் வாருங்கள்
இது வைகாசி…!!!!!
-ஐங்கரன்-

தாயகச்செய்திகள்