வவுனியா சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்காவிட்டால் மலசலகூடத்திலேயே உறங்கவேண்டும்!

 

வவுனியா சிறைச்சாலையில் சிறைக்காவலர்களும் நீண்ட காலமாக தடுத்து வைத்திருக்கின்ற சிறைக்கைதிகளும் இணைந்து செய்யும் அநீதிகள் தொடர்பாக வவுனியா நீதிமன்றத்தில் விசாரணைக்காக வருகை தந்த விளக்கமறியல் கைதி ஒருவர் பதில் நீதிவானிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக தெரியவருவதாவது…….
வவுனியா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக வவுனியா சிறைச்சாலையில் இருந்து அழைத்து வரப்பட்ட விளக்கமறியலில் உள்ள கைதி ஒருவர் தனது கைகளை உயர்த்தி நீதிபதியிடம் சில விடயங்களை தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதன் போது கடமையில் இருந்த பதில் நீதிவான் கைதிக்கு அதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியிருந்தார்.
இதன் போது கைதி வவுனியா சிறைச்சாலையில் கைதிகளிற்கு பல்வேறான அநீதிகள் இடம்பெறுவதாகவும் கைதிகள் நல்ல இடத்தில் உறங்குவதற்கு சுமார் 3000 ரூபாய் வரை பெறப்படுவதாகவும் அப்பணம் வழங்கப்படாவிட்டால் மலசல கூட பகுதியிலேயே தங்கவிடப்படுவதாக தெரிவித்ததோடு சிறைச்சாலைக்குள் புகையிலை போதைப்பொருள் பாவனையும் இடம்பெறுவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
இவ்வாறான செயற்பாட்டிற்கு சிறைக்காவலர்களும் நீண்ட நாள் கைதிகளாக இருப்பவர்களும் இணைந்தே செயற்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.
இதன் போது அனைத்து சட்டத்தரணிகளும் எழுந்து குறித்த கைதி சுட்டிக்காட்டும் பிரச்சனை சிறைச்சாலையில் இடம்பெறுவதாக தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் பதில் நீதவான் வவுனியா சிறைச்சாலை பொறுப்பதிகாரியை நீதிமன்றத்திற்கு அழைத்து குறித்த கைதி தெரிவித்த கருத்தினை சுட்டிக்காட்டி இது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையினை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு தெரிவித்திருந்தார்.

தாயகச்செய்திகள்