அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார்? ராஜபக்ஷேக்களுக்குள் முறுகல்!

தனக்கு பின்னர் தனது புதல்வர் நாமல் ராஜபக்ஷ, நாட்டை ஆள வேண்டும் என்பதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விருப்பம் என முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரட்னம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முன்னிலை சோசலிசக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்துக் கொண்டிருந்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்திருந்த குமார் குணரட்னம், ”எதிர்வரும் காலத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது தொடர்பாக கூட்டு எதிரணிக்குள் சிக்கல் நிலை தோற்றம் பெற்றுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவிற்கு போட்டியிட முடியாத நிலையில், அவரது சகோதரர் கோட்டாபய ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், கோட்டாபய ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதில் மஹிந்த அதிருப்தி கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தனக்கு பின்னர் ஜனாதிபதி ஆசனத்தில் புதல்வர் நாமல் ராஜபக்ஷ அமர வேண்டும் என்பதே மஹிந்தவின் விருப்பம்.
இந்த நெருக்கடி காரணமாகவே மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலுக்கு இன்றி, பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்து வருகிறார்” எனவும் குறிப்பிட்டார்.

Allgemein