ஆழ ஊடுறுவி செல்லும் நச்சு அம்பு

போதை என்ற இரு எழுத்தில் உலகமே தள்ளாடும் போது அதில் சிக்காமல் விட இலங்கை விதி விலக்கல்ல. சமூகத்தை அழிக்கும் அரக்கனாக தற்போது போதைப் பொருள் உருவெடுத்துள்ளது.
ஆயுதப் போருக்கு முடிவு கண்டு விட்டோம். அரசியல் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து விடும் என்று அரசு கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் இன்று மாற்று வடிவில் உருவாகியிருக்கும் உயிர் கொல்லி போர் தான் போதைப்பொருள்.
நிச்சயம் இதனால் செத்து மடிவது பல கோடி மக்களாக இருக்கும் என்பதற்கு மாற்று கருத்து எதுவும் இல்லை. எமது நாகரிகம் வளர்ச்சி பாதையில் செல்கின்ற அதே தருணத்தில் தொன்று தொட்டு விளங்கி வரும் சில தீய பழக்கங்கள் தொடர்ந்தும் நலிவடையாமல் வலிமை பெற்றுச் செல்கின்றது.
போதைப் பொருள் பாவனை இன்று ஆறு தொடக்கம் அறுபது வரை வேரூன்றி நிற்பது கவலைக்குரிய விடயமே. நாட்டின் இன்றைய சூழலில் இந்த நச்சு அம்பு உயிர் கொள்ளியாக செயற்பட்டு வருகின்றது.
இலங்கையில் போதை பொருள் பாவனை காரணமாக விபச்சாரம் ,கொலை, கொள்ளை, கற்பழிப்பு, களவு போன்ற பாரிய குற்றச்செயல்கள் பெருகிவருகின்றது .
தற்போது ஆட்சி செய்துகொண்டிருக்கின்ற அரசாங்கமும், ஜனாதிபதியும் இந்த நாட்டில் இருந்து போதைப்பொருள் பாவனையையும் போதை பொருட்களையும் முற்றாக அழித்தொழிப்பதற்கு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரு குடும்ப தலைவன் போதை பொருளுக்கு அடிமையாகி இருந்தால் குடும்பத்தில் உள்ள ஏனைய நபர்களும் அதன் விளைவாக பாதிக்கப்பட்டு சமுதாய சீரழிவுகளுக்கு உள்ளாக்கப்பட் வேண்டியவர்களாக இருக்கின்றார்கள்.
இன்று வர்த்தக ரீதியில் உலகெங்கும் போதைப் பொருட்கள் சந்தைப்படுத்தப்படுகின்றன. சட்டவிரோதமான கடத்தல் போன்ற வழிகளிலேயே இவ்வர்த்தகம் நடைபெறுகின்றது.
தற்போது நவீன உருவிலும், எளிமையான முறையிலும் தயாரிக்கப்படுகின்றது. மிகச் சிறிய அளவு பாவிப்பதன் மூலம் அதிகளவு போதை தரக்கூடியதாக அவை தயாரிக்கப்பட்டுள்ளன.
மேலும், இவை இலகுவாக கடத்தவும் பரிவர்த்தனை செய்யவும் வாய்ப்பாக அமைந்தன. வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட ஹெரோயின், கொகேய்ன் போன்ற பல போதைப்பொருட்கள் மாத்திரை வடிவத்தில் தயாரிக்கப்படுகின்றன.
“கடந்த காலத்தில் மது, கஞ்சா, அவின், ஹேரோயின் பாவனையில் இருந்து எமது சமூகம் விடுபட்டு வருகின்ற வேளையில் மிகக் கொடூரமான செயற்பாடாக போதை மாத்திரைகள் பாவிக்கப்படுகின்றது.
போதைப் பொருள் பாவிப்பவர்களை எளிதில் அறிந்து கொள்ள முடியாது, காரணம் அந்த அளவு தொழிநுட்பம் வளர்ந்து விட்டது. பேதைப் பொருளை உடலிற் செலுத்திக் கொள்ளும் பழக்கம், தீவிர பாவனையாளரிடையே உள்ளது.
ஆபத்தின் உச்ச கட்டத்தில் இருக்கும் போது படிப்படியாக சில வருடங்களின் பின்னர்தான் இனம் கண்டு கொள்ள முடியும். இலங்கையின் உல்லாசப் பயணிகளின் வருகை போன்ற காரணிகள் நவீன போதைப் பொருட்கள் நாட்டினுள் பிரவேசிக்க வழிவகுத்தன.
பொலிஸ் விசேட படையினரால் மேற்கொள்ளப்பட்ட, ஹெரோய்ன் போதைப் பொருள் கைப்பற்றல் தொடர்பிலான 3 வருட கணக்கெடுப்பில், 2015 தொடக்கம் 2018.04.22 ஆம் திகதி வரையில் 75 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெரோய்ன் போதைப் பொருள் இதுவரையில் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு 151 சுற்றிவளைப்புகளில், 169 பேர் கைது செய்யப்பட்டதுடன், 434 கிராம் அளவிலான ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டில் 85 சுற்றிவளைப்புகளில் 94 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 535 கிராம் ஹெரோய்னும், 2017 ஆம் ஆண்டில் 299 சுற்றிவளைப்புகளில், 317 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 5396 கிராமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ்வாண்டு 2018.04.22 ஆம் திகதி வரையில், 125 சுற்றிவளைப்புகளுடன் 131 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 7414 கிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸ் விசேடப் பிரிவினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்கு போதைக்கு முற்றுப்புள்ளி திட்டம் மட்டுமே போதுமானதல்ல, சகலரும் பூரண ஒத்துழைப்பின் மூலமே போதைப் பொருள் ஒழிப்பை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும்.
போதைக்கு அடிமையானோரை அதிலிருந்து மீட்டெடுப்பது, இளம் சந்ததியினரைப் பாதுகாப்பது என்ற இலக்கிலேயே அரசாங்கம் பல வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
தலைத்தூக்கியிருக்கும் போதைப் பொருள் பாவனை இலங்கைத் தீவை மீண்டும் அமைதி இழக்கச் செய்து சமூக கெடுமானங்களை உருவாக்கி நல்லிணக்கத்தையும் இன ஒற்றுமையையும் உடைத்துவிடும் நாசகார முயற்சியாகவே பயன்படுத்துவதற்கு காரணமாகலாம்.

இந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Nivetha அவர்களால் வழங்கப்பட்டு 25 Apr 2018

தாயகச்செய்திகள்