ஆனந்த சுதாகரனின் விடுதலை: உண்ணாவிரத போராட்டம்!

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையினை வலியுறுத்தி மட்டக்களப்பில் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடாத்தப்பட்டது.

இந்திய படைகளினால் தமிழ் பெண்களின் கற்புகள் சூறையாடப்பட்டபோது, அந்த படையினருக்கு எதிராக சாத்வீக ரீதியில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த அன்னை பூபதியின் நினைவு நாளிகள் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணியின் ஏற்பாட்டில் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் நடாத்தப்பட்டது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி தலைவியும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினருமான திருமதி செல்வி மனோகரின் ஏற்பாட்டில் தலைமையில் இந்த அடையாள உண்ணாவிரத போராட்டம் நடாத்தப்பட்டது.நல்லாட்சியின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு பிள்ளைகளின் நிலை கருதி ஆனந்தசுதாகரனின் விடுதலையினை துரிதப்படுத்தவேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி தலைவியும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினருமான திருமதி செல்வி மனோகர் தெரிவித்தார்.

இன்று அடையாள உண்ணாவிரத போராட்டமாக நடாத்தப்படுவதாகவும் ஒரு மாத காலத்திற்குள் விடுதலை செய்யப்படாவிட்டால் தொடர் உண்ணாவிரத போராட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி தொடர்ச்சியான உண்ணாவிரத போராட்டங்களை நடாத்துவதற்கு வட கிழக்கில் உள்ள பெண்கள் முன்வரவேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.