மூன்றாம் உலகப்போர் மூளூம் அபாயம் .இந்தியாவின் நிலை என்ன..?

சிரியாவில் நடந்து கொண்டிருக்கும் போர் காரணமாக மூன்றாம் உலகப் போர் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பிலான கருத்துக்கள் ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் என அனைத்தையும் ஆக்கிரமித்துள்ளன. இவ்வாறான சந்தர்ப்பத்தில் மூன்றாம் உலகப்போருக்கான வாய்ப்புக்கள் நிஜமாகவே இருக்குமெனில் இந்தியாவின் நிலை என்னவாக இருக்கும் என்பது தொடர்பில் பேராசிரியர் ராம் மார்க்ஸ் இந்திய ஊடகமொன்றிட்கு கருத்து தெரிவிக்கும் போது,

மிகப்பெரிய இழப்புக்களை சந்தித்துக் கொண்டிருக்கின்ற நாடாக இன்று சிரியா இருக்கிறது. சிரியா விச வாயு பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு உண்மையாக கூட இருக்கலாம்.

ஆனால் அதற்கு பதிலாக அமெரிக்கா மேற்கொள்ளும் தாக்குதல் எந்தவகையிலும் ஏற்புடையதல்ல. அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் இதை விட மோசமான தடை செய்யப்பட்ட ஆயுதங்களை மக்கள் மீது பயன்படுத்தி கொலை செய்தமை நமக்கு தெரியும்.

இது மாத்திரமல்லாமல் இதே அமெரிக்கா பத்து ஆண்டுகளுக்கு முன் ஈராக் மீது படையெடுத்த நிலையில், அந்த படையெடுப்பின் காரணமாக ஈராக் கடுமையான விச ஆயுதங்களை வைத்திருப்பதாக காரணத்தை கூறி தாக்குதல் மேற்கொண்டிருந்தது.

அதனால் மிகப்பெரிய அழிவுகள் மேற்கொள்ளப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த நாட்டினுடைய தலைவர் தூக்கிலேற்றி தொங்கவிடப்பட்டு எல்லாம் முடிந்த பின்னர் அமெரிக்கா ஈராக் மீது வைத்த குற்றச்சாட்டுக்கள் பொய் என தெரிந்தது.

அப்போது அமெரிக்கா, இந்த குற்றச்சாட்டுக்கள் உண்மையென நினைத்து தாக்குதலை தொடர்ந்தோம் என சாதாரணமாக சொல்லி நழுவியதை நாம் பார்த்தோம்.

இப்படியானதொரு சூழலில் இந்த தாக்குதலை மேற்கொண்டு மேலும் மேலும் பெரிய அளவில் பரிதாபத்திற்குரிய சிரிய மக்கள் மீது தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருப்பதென்பது உண்மையாகவே கண்டிக்கப்பட வேண்டியதொன்று என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சிரியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உள்நாட்டு போர் உலக ரீதியில் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்துமா? குறிப்பாக மூன்றாம் உலகப் போருக்கான ஒரு சமிக்ஞையாக நாம் பார்க்கலாமா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு பேராசிரியர் பெர்னார்ட் டி.சாமி கருத்து தெரிவிக்கையில்,

இந்த போரை பொருத்தவரையில் மூன்றாம் உலகப் போர் ஏற்படுவதற்கான சூழல் அதிகமாக இருப்பதாக விளாடிமிர் பூட்டின் தெரிவித்துள்ளார்.

இந்த போரை பொருத்தவரையில் ரஸ்யா, ஈரான், சிரியா ஒரு பக்கமாகவும், அமெரிக்கா, அரபு நாடுகள், பிரான்ஸ், ஜேர்மனி எல்லாம் ஒரு புறமாகவும் இருக்கிறார்கள்.

இந்தியாவை பொருத்தவரையில் நடுநிலையைதான் வகித்து கொண்டு வருகிறது. சிரியாவில் நடந்து கொண்டு வரும் தாக்குதல் மிகப்பெரிய கொடூரம் என்று நாம் சொல்லிக் கொண்டு வருகிறோம்.

இதேவேளை, குறித்த இரண்டு அணிகளிலுமே எமக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். இதனால் எந்த அணிக்கு சார்பாக நடந்து கொள்வது என்பது தொடர்பில் வெளிப்படையாக அறிவிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

உலகச்செய்திகள்