யாழ்ப்பாணத்தில் பிரபாகரனின் சிலையை அமைத்தால் எதிர்க்க மாட்டோம்!!

யாழ்ப்பணத்தில் நாம் யாருடைய சிலைகள் அமைப்பது என்றாலும் பக்கபலாமாக இருப்போம்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் சிலை அமைப்பது என்றால் கூட நாம் எதிர்க்க மாட்டோம் எனத் தெரிவித்திருக்கும் ஈபிடிபி கட்சியின் யாழ்ப்பாண அமைப்பாளரும் மாநகர சபை உறுப்பினருமான வேலும் மயிலும் குகேந்திரன் (ஜெகன்) அவ்வாறு சிலையை அமைக்க முடியுமா என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

அனைவரும் ஒற்றுமையாக இணைந்து பயணிக்க வேண்டுமென்று கூறியிருக்கின்ற நிலையில் நாமும் இந்தச் சபையில் எதிரிக் கட்சியாக அல்லாமல் எதிர்க்கட்சியாகவே செயற்படுவோம் என்றும் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதலாவது அமர்வு நேற்று சபை மண்டபத்தில் முதல்வர் ஆர்னோல்ட் தலைமையில் இடம்பெற்றது.

இந்த அமர்விலேயே அவர் கன்னி உரையாற்றுகையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தெரிவித்ததாவது,

யாழ்ப்பணத்தில் சிலைகள் வைக்கப்பட வேண்டும் என இங்குள்ள பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கு நாம் ஆட்சேபனை தெரிவிக்க மாட்டோம். நீங்கள் யாருடைய சிலை என்றாலும் நிறுவலாம்.

அதற்கு நாம் பக்க பலமாக இருப்போம். நாங்கள் இந்த சபையில் ஒரு கூட்டுக் குடும்பமாக செயற்பட வேண்டும்.

யாழ்ப்பாணம் மாநகர சபையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடி விசாரணைக்கு நாம் பூரண ஒத்துழைப்பு தருவோம். அதே போன்று தொடர்ந்து முன்னெடுக்கப்படும் நடவடிககைகளுக்கும் எமது ஒத்துழைப்பையும் இச் சபையில் வழங்குவோம்.

இதே வேளை இங்கு ஒற்றுமை குறித்து பலராலும் பேசப்பட்டிருக்கின்றது.

அந்த ஒற்றுமைய என்பது மக்கள் நலன் சார்ந்த ஒற்றுமையாக இருக்க வேண்டும். அவ்வாறு மக்கள் நலன்சார்ந்து முன்னெடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு எமது ஆதரவும் பங்களிப்பும் நிச்சயம் இருக்கும்.

ஆகவே அவ்வாறு மக்களுக்காக சரியான முறையில் இந்தச் சபை தனது நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

தாயகச்செய்திகள்