ரணிலுடன் எந்த உடன்பாடும் கையெழுத்திடவில்லை! – கைவிரித்தது கூட்டமைப்பு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்ப்பதற்காக, பிரதமர் ரணிலுடன் எழுத்து மூலம் எந்த உடன்படிக்கையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்து கொள்ளவில்லை என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், “அண்மைய நாட்களில் இலங்கை அரசியலில் ஒரு முக்கிய தாக்கம் ஏற்பட்டிருந்தது. ஆட்சி எவ்வாறு இருக்கப் போகின்றதென்பது தெளிவாகவில்லை. இந்நிலையில் தான் கூட்டமைப்பு தெளிவாகவொரு முடிவை எடுத்திருந்தது. அதாவது கடந்த 2015 ஆம் ஆண்டு மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையில் இந்த அரசாங்கம் செயற்படுவதற்கு அரசிற்கு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும்.

அதனடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளினால் அது தற்பொது இடைநிறுத்தப்பட்டதாகவே காணப்படுகின்றது. ஆகவே அதனைத் தொடர்ந்து முன்னெடுக்க தேசிய அரசாங்கத்திற்கு இன்னும் 2 வருட காலம் இருக்கின்றது. இந் நிலையில் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்ட காரணத்திற்கான சந்தர்ப்பத்தை நாங்கள் குழப்பும் வகையில் நாங்கள் செயற்படக் கூடாது.

மேலும் அத்தகைய புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சிகள் உள்ளிட்ட பல விடயங்களைக் குழப்புகின்ற வகையில் பொது எதிரணி முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாம் உடந்தையாக இருக்க முடியாது. அதனடிப்படையிலேயே நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்த்து பிரதமருக்கு ஆதரவளிப்பதான தீர்மானமொன்றை நாங்கள் எடுத்திருந்தோம்.

Allgemein