முல்லைத்தீவு சிங்கள குடியேற்றங்களை தடுக்க தீர்மானம்!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களைக் கண்டிக்கும் வகையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் 38 உறுப்பினர்களும் எதிர்வரும் 10ம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சென்று கவனயீர்ப்பு ஒன்றை செய்வதென வடமாகாண சபையின் 120வது அமர்வில் இன்று தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர் நிலத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை தடுப்பதற்கான வழிவகைகள் தொடர்பாக ஆராய்வதற்கான விசேட அமர்வு இன்றைய தினம் பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.

இதன்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது. இன்றைய அமர்வில் மேற்படி சிங்கள குடியேற்றங்களை தடுப்பதற்கான உறுதியான தீர்மானம் எடுக்கவேண்டும் எனவும்,

வடமாகாணசபை உறுப்பினர்கள் அனைவரும் முல்லைத்தீவு மாவட்டத்திற்குச் சென்று எதிர்ப்பை காட்டவேண்டும் என மாகாணசபை உறுப்பினர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

இதற்கமைய எதிர்வரும் 10ம் திகதி முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர்கள், அவை தலைவர் உள்ளிட்ட 38 மாகாணசபை உறுப்பினர்களும் முல்லைத்தீவுக்கு சென்று எல்லை கிராமங்களை பார்வையிட உள்ளனர்.

அத்துடன் திட்டமிட்ட குடியேற்றங்களுக்கு எதிரான கவனயீர்ப்பை செய்வதுடன் மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை கையளிப்பதெனவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Allgemein