பொருளாதார ரீதியாக மிகப்பெரியளவில் இலங்கையில் காலூன்றி விட்ட சீனா!

பிற நாடுகளுக்கு எதிராக இலங்கையைப் பயன்படுத்துவதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று இலங்கை அரசாங்கம் அவ்வப்போது வாக்குறுதிகளைக் கொடுத்தாலும் அதனை இந்தியா நம்பத் தயாராக இல்லை.

அதுபோல சீனாவும் இலங்கையைத் தன’து தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொள்வதை நிறுத்திக் கொள்வதாகவும் தெரியவில்லை.

இந்தியக் கடற்படையினரின் ஏற்பாட்டில் அண்மையில் புதுடெல்லியில் நடந்த கருத்தரங்கொன்றில் உரையாற்றிய கூட்டுப்படைகளின் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன இராணுவத் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொள்ள இடமளிக்கப்படாது என்று உறுதியாகக் கூறியிருந்தார்.

அது மாத்திரமன்றி எந்த நாட்டுக்கெதிராகவும் எந்தவொரு நாடும் இலங்கையையோ இலங்கையின் கடற்பகுதியையோ பயன்படுத்திக் கொள்ள இடமளிக்கப்படாது என்ற வாக்குறுதி இலங்கையின் அரசியல் தலைவர்களால் புதுடெல்லிக்கு கொடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்தியா இந்த வாக்குறுதியை நம்புகிறதோ இல்லையோ என்பதல்ல பிரச்சினை. இந்த வாக்குறுதியை நம்பி தனக்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கைவிடும் நிலையில் இந்தியா இல்லை என்பதே உண்மை.

அதேவேளை சீனாவும் தனக்கு இலங்கையில் எந்தப் பாதுகாப்பு மூலோபாய நலன்களை அடையும் திட்டமோ கடற்படைத் தளத்தை அமைக்கும் திட்டமோ இல்லை என்று கூறிக்கொண்டாலும் புதிய புதிய வழிகளில் இலங்கையில் தனக்கான இடத்தை உறுதி செய்து கொள்வதில் உறுதியாக இருக்கிறது.

கடந்த வாரம் ஜப்பானிய ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சீனாவின் பட்டுப்பாதை திட்டம் பிற நாடுகளை அச்சுறுத்துவதாக இருக்கக் கூடாது என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தச் செவ்வியில் ஜனாதிபதி அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சீனா தனது இராணுவத் தேவைகளுக்குப் பயன்படுத்தின் கொள்ளக் கூடும் என்ற கவலைகள் இருப்பதை தன்னால் புரிந்து கொள்ள முடிகிறது என்று குறிப்பிட்டதுடன், அவ்வாறு இருதரப்பு உடன்பாட்டை மீறுவதற்கு எமது அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என்றும் கூறியிருந்தார்.

இலங்கையில் சீனாவின் ஒவ்வொரு நகர்வுகளும் இலங்கைக்கு எதிர்வினையாக அமைந்து கொண்டிருக்கின்றன. இதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்தும் உறுதிப்படுத்தியிருக்கிறது.

இலங்கையில் சீனா பொருளாதார ரீதியாக மிகப்பெரியளவில் காலூன்றி விட்டது. இலங்கையின் பொருளாதாரத்தில் தனது பலத்தை நிரூபிக்கும் அளவுக்கு சீனா முக்கியமான பங்காளியாகி விட்டது.

இந்தநிலையில் அடுத்த கட்டமான பாதுகாப்பு நலன்களை அடைவதற்கு பல்வேறு வழிகளைக் கையாளத் தொடங்கியிருக்கிறது.

ஆனால் வெளிப்படையாக இலங்கையில் இராணுவ ரீதியான எந்த மையங்களையும் சீனாவினால் அமைக்க முடியாது. அதற்கு இலங்கையும் இடமளிக்காது. இந்தியாவும் அனுமதிக்காது.

அதனால் இராணுவ நலன்களுக்கு அப்பாற்பட்ட வழிகளில் பாதுகாப்பு நலன்களை அடையும் வாய்ப்புகளை சீனா பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கியிருப்பதாக சந்தேகம் கிளம்பியுள்ளது.

இவ்வாறான இரண்டு வாய்ப்புகள் பற்றி அண்மையில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. முதலாவது தேவேந்திர முனைக்கு அருகே ருகுணு பல்கலைக்கழகத்தில் சமுத்திரவியல் ராடர் மையமொன்றை அமைப்பதற்கான திட்டமொன்றை இலங்கை அரசாங்கத்திடம் சீனா சமர்ப்பித்திருக்கிறது.

இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து இந்த ராடர் நிலையத்தை அமைக்க சீனா திட்டத்தை முன்வைத்திருக்கிறது. இதன் தொழில்நுட்பத் தன்மைகள் பற்றிய முழுமையான தகவல்கள் வெளிவரவில்லை.

எனினும் உயர்திறன் கொண்ட சிற்றலை ராடர் நிலையத்தை அமைக்கும் திட்டமாக இருக்கலாம் என்று உயர்மட்டத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இவ்வாறான ராடர் நிலையத்தின் மூலம் 120 பாகை கோணத்தில் இந்தியப் பெருங்கடலில் 180 கிலோமீற்றர் தொலைவு வரை கண்காணிக்க முடியும் என்றும் நம்பப்படுகிறது.

சமுத்திரவியல் ஆய்வுகளுக்காகவே இந்த ராடர் நிலையம் என்று சீனா கூறினாலும் இந்தியா அதனை நம்பத் தயாராக இல்லை.

பின்னர் இந்த நிலையத்தின் மூலம் கப்பல்களை கண்டறியும் ஆற்றலைப் பெற முடியும் என்று சீனா வெளிப்படையாகவே இலங்கை அரசுக்கு கூறியிருக்கிறது.

இது இந்தியாவின் சந்தேகத்தை வலுப்படுத்துவதாக உள்ளது. சீனா இந்த விடயத்தை மிகச் சாதுரியமாக கையாள முனைகிறது என்று இந்தியா நம்புகிறது.

இந்த ராடர் நிலையத்தை அமைக்கின்ற முயற்சிகள் எதிலும் இலங்கைக் கடற்படையை தொடர்பு வட்டத்துக்குள் சீனா கொண்டுவர விரும்பவில்லை.

கடற்படையை உள்ளே கொண்டு வந்தால் அது பாதுகாப்பு நலன்சார் திட்டமாக அம்பலப்படுத்தப்பட்டு விடும். இதனை வெளிப்படையாக இராணுவத் திட்டமாக அறிவித்தால் இந்தியா போன்ற நாடுகள் எதிர்க்கும்.

அதனைத் தவிர்ப்பதற்காக இலங்கைக் கடற்படையை வெளியே வைத்துக் கொண்டு ருகுணு பல்கலைக்கழகத்துக்கும் சமுத்திரவியலுக்கான தென் சீனக் கடல் நிறுவகத்துக்கும் இடையிலான ஒரு விஞ்ஞான ஆய்வு முயற்சியாக வெளிப்படுத்த முனைகிறது சீனா.

இது இந்தியாவுக்குப் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கின்ற முதலாவது விடயம். சமுத்திரவியல் ஆய்வுகள், கடல் வளங்கள், கடலில் நீரின் ஆழம், நீரோட்டத்தின் தன்மைகள் போன்றன தொடர்பான தரவுகளை சேகரிக்கப் பயன்படுத்தப்படக் கூடியவை. இந்தத் தரவுகள் நீர்மூழ்கிகளின் நடமாட்டத்துக்கு முக்கியமானவை.

இதனால் இந்தியப் பெருங்கடலில் சீனா தனது கப்பல்களை நிறுத்தி வைத்து இத்தகைய ஆய்வுகளை மேற்கொண்டு கடந்த பல ஆண்டுகளாகவே தரவுகளைச் சேகரித்து வருகிறது. இது இந்தியாவுக்கும் தெரியும்.

இந்தியக் கடல் எல்லைக்குள் இத்தகைய ஆய்வுகளை மேற்கொண்ட சில சீனக் கப்பல்களை இந்தியக் கடற்படை துரத்தி இருக்கிறது.

2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அந்தமான கடற்பகுதியில் இத்தகைய கடல் ஆய்வுகளை மேற்கொண்டு தரவுகளைச் சேகரித்துக் கொண்டிருந்த சீனக் கப்பல் ஒன்றை இந்தியக் கபடற்படை துரத்திச் சென்றதாகவும், அந்தக் கப்பல் கொழும்புத் துறைமுகத்துக்குள் அடைக்கலம் தேடிக்கொண்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தமை நினைவிருக்கலாம்.

ருகுணு பல்கலைக்கழகத்தில் சீனாவின் உதவியுடன் அமைக்கப்படும் சமுத்திரவியல் ஆய்வுக்கான ராடர் நிலையம் இந்தியப் பெருங்கடலில் சீன நீர்மூழ்கிகளின் பயணங்களுக்கான வழித்தடத்தை தேடுவதற்கு உதவியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

இராணுவ நடவடிக்கைகளின் போதும் கடலுக்கு அடியிலான போர்த் திட்டங்களை செயற்படுத்தவும் இந்தத் தரவுகள் கைகொடுக்கும் என்பது இந்தியாவின் கணிப்பு.

இத்தகைய தருணத்தில் சீனாவின் இன்னொரு நநகர்வு குறித்தும் இந்தியாவுக்குச் சந்தேகம் எழுந்திருக்கிறது. கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையத்தை காலியில் அமைப்பதற்கு இலங்கை அரசாங்கம் அண்மையில் விருப்பம் வெளியிட்டிருந்தது.

இந்த நிலையத்தை அமைத்து செயற்படுவதற்கு தேவையான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கும் சீனா விருப்பம் வெளியிட்டுள்ளதாக இந்தியாவுக்கு புலனாய்வு அறிக்கைகள் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

காலியில் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையத்தை அமைப்பதற்கான உதவியை வழங்குவதற்கு முன்னதாக இந்தியா அக்கறை காட்டியிருந்த போதிலும் பின்னர் அதனைக் கருத்தில் கொள்ளவில்லை. இந்தநிலையில் தான் சீனா அதில் அக்கறை செலுத்தத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையம் சீனாவின் உதவியுடன் அமைக்கப்பட்டால் இந்தியப் பெருங்கடல் வழியாகச் செல்லுகின்ற கப்பல்களின் நடமாட்டம் பற்றிய முழுமையான தரவுகள் அதற்குக் கிடைக்கும். இந்தத் தரவுகள் சீனாவுக்கு கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.

எனவே தான் ருகுணு பல்கலைக்கழகத்தில் ராடர் நிலையத்தையும் காலியில் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையத்தையும் அமைக்கும் சீனாவின் திட்டங்களை இந்தியா கவலையோடும் கரிசனையோடும் பார்த்துக் கொண்டிருக்கிறது.

எவ்வாறாயினும் இந்தியா தனது பாதுகாப்பு நலன்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய எந்தத் திட்டமும் இலங்கையில் செயற்படுவதை நிச்சயம் எதிர்க்கும் என்றே எதிர்பார்க்கலாம்.

அம்பாந்தோட்டை துறைமுக விடயத்திலும் கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்திலும் கோட்டை விட்ட இந்தியா இந்த விடயத்தில் மாத்திரம் அழுத்தங்களைக் கொடுத்து நிறுத்த முடியுமா என்ற கேள்விகள் எழலாம்.

2014ம் ஆண்டு திருகோணமலை சீனக்குடாவில் ஒரு விமானப் பொறியியல் மையத்தை அமைக்க சீனா திட்டமிட்ட போது இந்தியா அதனைக் கடுமையான அழுத்தங்களைக் கொடுத்து நிறுத்தியிருந்தமை நினைவிருக்கலாம்.

அம்பாந்தோட்டைத் துறைமுகம், கொழும்புத் துறைமுக நகரம் என்பன மிகப்பெரிய முதலீடுகளுடன் தொடர்புடைய விடயங்கள். அதனை வணிக முயற்சியாக காண்பித்து இரு நாடுகளாலும் தப்பிக்கொள்ள முடிந்தது.

ஆனால் ராடர் நிலையமோ, கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையமோ பொருளாதாரத் தேட்டத்துக்கான முதலீடுகள் அல்ல. பொருளாதார வளர்ச்சியைக் காரணம் காட்டி தப்பித்துக் கொள்ள முடியாது என்பதால் இந்தியா இந்தத் திட்டங்களுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் எதிர்ப்புகளையும் தாண்டி சீனா இந்தத் திட்டங்களை செயற்படுத்துவதில் வெற்றி பெறுமானால் இலங்கையில் இந்தியா தோல்வி அடைந்து கொண்டிருக்கிறது என்பது உறுதியாகி விடும்.