நீரில் மூழ்கி மரணித்த ஐவரின் உடலங்களும் ஒரே குழியில் அடக்கம்!

திருகோணமலை நிலாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள பெரியகுளத்திற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை(11.03.2018) தாமரைப் பூப்பறிக்கச் சென்றவர்களின் தோணி கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்த 4 சிறுவர்கள் மற்றும் தோணி வலிப்பவர் உட்பட ஐவரின் நல்லடக்கம் திருகோணமலை நிலாவெளி இந்து மயானத்தில் நேற்று(12.03.2018) திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது.

இறுதிச் சடங்கு நிகழ்வில் அஞ்சலி செலுத்துவதற்காக கிராம பொதுமக்கள், அனுதாபிகள் என அதிக எண்ணிக்கையிலானோர் கலந்து கொண்டனர்.

நீரில் மூழ்கி உயிரிழந்த ஐவரின் உடல்களும் ஒரே சவக் கிடங்கில் அடக்கம் செய்யப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை அங்குள்ள குளத்திற்குச் சென்று பொங்கி வழிபட்டு பொழுதைக் கழிக்கச் சென்றவர்களே இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்திருந்தனர்.

நிலாவெளி 2 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களான சுரேஸ் கேசிக்ராஜ் (வயது 9) சுரேஸ் யுதேஸன் (வயது 7), சுகந்தன் பிரணவி (வயது 7), தங்கத்துரை சங்கவி (வயது 9) மற்றும் தோணியை ஓட்டிச் சென்ற தருமலிங்கம் தங்கத்துரை (வயது 32) ஆகியோரே நீரில் மூழ்கி மரணமடைந்திருந்தனர்.

சேறும் சகதியுமான அந்தக் குளத்திலுள்ள தாமரைப் பூக்களை இவர்கள் பறித்துக் கொண்டிருந்த சமயமே தோணி கவிழ்ந்து இந்த விபத்து சம்பவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Allgemein