இலங்கைப் பாடசாலை மாணவர்களுக்காக அறிமுகமாகும் புதிய மாற்றம்!

இலங்கையில் 15 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்க இலங்கை ஆட்பதிவு திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இதன்படி ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதமளவில் அடையாள அட்டைகளை விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்கான குறைந்த மட்ட வயதெல்லை 16 இல் இருந்து 15 ஆக குறைப்பதற்கான திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதனாலேயே இந்த விடயத்தை முன்னெடுக்கக் கூடியதாக உள்ளது என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 2019ம் ஆண்டு கபொத சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் தேசிய அடையாள அட்டைக்காக தற்சமயம் விண்ணப்பிக்கலாம் என்றும் திணைக்களத்தின் இயக்க செயற்பாடு மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆணையாளர் இதுகுறித்துத் தெரிவித்தார்.

இதேவேளை, மாணவர்கள் தமது விண்ணப்பங்களை உரிய பாடசாலை அதிபரின் ஊடாக அனுப்பி அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ளமுடியும் என்று மேற்படி திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.