மஹிந்த ரத்தம் சிந்தி புலிகளை அழித்தார், ரணில் ரத்தம் சிந்தாமல் தமிழரை மடக்கினார்

நல்லாட்சி அரசாங்கம் என்ற போர்வையில் தமிழ்த் தரப்பை கடந்த மூன்று ஆண்டுகாலமாக ஏமாற்றிய ஐக்கிய தேசியக் கட்சி, 2020ஆம் ஆண்டு வரை அரசாங்கத்தை கொண்டு நடத்துவதற்கு வேறு புதிய அரசியல் சாணக்கியம் ஒன்றை கையாண்டுள்ளதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் இடம்பெற்ற போர்க்குற்றம், மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட எந்தக் குற்றச் செயல்களாக இருந்தாலும், இலங்கை அரசு என்ற கட்டமைப்பையும் இலங்கையின் இறைமை தன்னாதிக்கம் என்பதையும் காப்பாற்றும் நோக்கில், ஜெனீவா மனித உரிமைச் சபைக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் பல திட்டங்களை அனுப்பியுள்ளதாக அறியமுடிகின்றது.

அதற்கு ஏற்ற முறையில் தமிழ்த்தரப்பு ஒன்றின் உதவியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பெற்றிருந்தார் என்றும் எதிர்வரும் 16 ஆம் திகதி ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை விவகாரம் எடுக்கப்படும்போது, அந்த திட்டங்களுக்கு ஏற்ப சில விதப்புரைகளை, மனித உரிமைச் சபை வெளியிடும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சித் தகவல்கள் கூறுவதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியளர் குறிப்பிட்டார்.

ஐக்கியதேசிய கட்சியின் தோற்றம் அதன் செயற்பாடுகள் பற்றி யாருக்கும் விளக்கமளிக்க வேண்டிய ஒரு தேவையில்லை. அந்த கட்சி ஆட்சியில் இருந்த ஒவ்வொரு கால கட்டங்களிலும் தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழத்துவிட்ட வன்முறைகள் இன ஒடுக்குமுறைகள் குறித்தும் பேச வேண்டியதில்லை.

நில ஆக்கிரமிப்புகள், சிங்கள குடியேற்றங்கள் என்று பௌத்த தேசியவாதத்தை வடக்கு கிழக்கு மாகாணத்தில் முதலில் அறிமுகப்படுத்தியதும் இந்த கட்சிதான். எனவே ஐக்கியதேசிய கட்சியின் வரலாறுகளை புரட்டிப்பார்ப்பதை விட, 2020ஆம் ஆண்டு வரை என்ன நடக்கப் போகின்றது என்பதுதான் தற்போதைய சந்தேகம் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.

கொழும்பில் பல அரசியல் கட்சிகள் செயற்பட்டாலும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் ஐக்கியதேசிய கட்சியும்தான் பேரினவாத நடைமுறைகளை அடிப்படையாக கொண்டது. 1994ம் ஆண்டு ஜே.வி.பி நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதில் இருந்து இன்று வரை அதுவும் ஒரு பேரினவாத கட்சியாக செயற்படுவதாக கூறினாலும் அது சிறிய பேரினவாத கட்சிதான்.

ஜாதிக ஹெல உறுமயவும் அவ்வாறுதான். ஆனால் யுத்தத்துக்கு தீணிபோட்டு அதை முடித்து வைத்த பெருமை இந்த இரு கட்சிகளுக்கும் உண்டு. எனினும் இந்த இரண்டு சிறிய கட்சிகளும் தந்திரோபாயமாக தமிழத்தரப்பை தங்கள் வலைக்குள் ஒருபோதும் விழுத்தியதாக கூறமுடியாது.

அவர்கள் நேரடியாகவே தங்கள் சிங்கள இனவாத நிலைப்பாட்டையும் தமிழர் தொடர்பான கருத்துக்களையும் வெளியிட்டு வந்துள்ளனர்.

ஆனால் ஐக்கியதேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் தமிழத்தரப்பை மறைமுகமாகவும் நேரடியாகவும் தங்கள் தந்திரோபாய வலைக்குள் விழுத்தியதுடன் அதை தேசிய அரசியலில் பயன்படுத்தி காலத்துக்கு காலம் ஆட்சியமைத்தும் வந்துள்ளன.

இந்த இரு கட்சிகளிலும் ஐக்கியதேசிய கட்சிதான் கூடுதலான தந்திரோபாயங்களை கையாண்டு தமிழத்தரப்பின் அரசியல் நியாயப்பாடுகளை சிதைத்தவர்கள் என்பது வெளிப்படை. 1983இல், 1987இல், 2002இல், ஐக்கியதேசிய கட்சி இந்தியா அமெரிக்கா என்ற சர்வதேச வலைப்பின்னல்களை இரத்தம் சிந்தாமல் நன்றாக பயன்படுத்தியது.

இந்த இடத்திலேதான், மஹிந்த ராஜபக்சவை ரணில் விக்கிரமசிங்க கடந்த மூன்று வருடங்களாக ஜெனீவாவில் காப்பாற்றினார் என்று விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆட்சியாளர்கள் யாராக இருந்தாலும் ”இலங்கை அரசு“ என்ற கட்டமைப்பை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு கட்சிவேறுபாடுகளுக்கும் அப்பால், ஒவ்வொரு சிங்கள அரசியல் தலைவர்களுக்கும் உண்டு என்பதை ரணில் விக்கிரமசிங்க நிரூபித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ச, ரத்தம் சிந்தி தமிழர் போராட்டத்தை அழித்தார். ரணில் விக்கிரமசிங்க ரத்தம் சிந்தாமல் தமிழ்தரப்பு அரசியல் தலைமைகளை முடக்கினார்.

தற்போது மைத்திரி ரணில் நல்லாட்சி அரசாங்கம் ஊசலாடிக் கொண்டுள்ள நிலையிலும், ஜெனீவாவில் மஹிந்த ராஜபக்சவையும் அவரது சகாக்களையும் காப்பாற்ற பிரதமர் ரணில் முற்படுகின்றார்  என்பது பௌத்த தேசியவாத இலங்கை அரசு என்ற கட்டமைப்பின் பண்பை வெளிக்காட்டியுள்ளது.

ஆனால் தமிழ் கட்சிகள் தமிழர்களின் இறைமை அதிகாரத்துடன் கூடிய சுயமரியாதையை அங்கீகரிக்க வேண்டும் என்ற பிரதான இலக்கில் இருந்து விலகி வேறு பாதையில் சென்றுகொண்டிருப்பதும், ஐக்கியதேசியக் கட்சிக்கு முன்டு கொடுப்பதும் ஆரோக்கியமான நகர்வு அல்ல எனவும் விமர்சகர்கள் கூறியுள்ளதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் மேலும் குறிப்பிட்டார்.

Allgemein