டிரம்ப்பின் பழிவாங்கும் நடவடிக்கையால் அதிர்ந்த கனடா!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரும்பு மற்றும் அலுமினியம் மீதுள்ள வரியை அதிரடியாக உயர்த்தி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

இதனால், அமெரிக்காவுக்கு அதிக இரும்பு ஏற்றுமதி செய்யும் கனடா கடும் அதிருப்தியில் உள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப், பொருளாதார ரீதியாக பல மாற்றங்களை கொண்டு வர முயற்சி செய்து வருகிறார்.

வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி மீது சமீப காலமாக கவனம் செலுத்தி வரும் அவர், வெளிப்படையாகவே பல கருத்துக்களை கூறி சர்ச்சையை கிளப்பினார்.

அமெரிக்க வாகனங்களை இந்தியாவில் இறக்குமதி செய்ய விதிக்கப்படும் வரியை சமீபத்தில் அவர் வெளிப்படையாகவே விமர்சித்தார்.

ஹார்லி டேவிட்சன் போன்ற வாகனங்களுக்கு வரியை குறைக்க அவர் வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில், அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியம் மீது புதிய வரியை சுமத்தவுள்ளதாக அதிர்ச்சி கொடுத்துள்ளார் டிரம்ப்.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் இரும்பின் மீது 25 சதவீதமாக வரியை உயர்த்தப் போவதாகவும், அலுமினியம் மீது 10 சதவீதமாக உயர்த்தப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால்,முக்கியமாக கனடா ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

அமெரிக்காவை மற்ற நாடுகள் மிக மோசமாக நடத்துவதாகவும், அதனால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். அடுத்த வாரம் இது நடைமுறைக்கு வரும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தன்னிச்சையாகவே பல அதிரடி முடிவுகளை எடுக்கும் டிரம்ப், இந்தமுறையும் நிபுணர்களின் எச்சரிக்கையை மீறி இவ்வாறு கூறியுள்ளார்.

டிரம்ப்பின் இந்த முடிவு அதிர்ச்சியளிப்பதாகவும், அதை திரும்பப் பெற வேண்டும் என கனடா தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நிபுணர்கள், டிரம்ப்பின் இந்த முடிவு செயல்படுத்தப்பட்டால், மற்ற நாடுகள், பதிலுக்கு அமெரிக்க பொருட்கள் மீதுள்ள வரியை உயர்த்துவார்கள் என்றும், இது ஒரு வர்த்தக போராக மாறும் எனவும் எச்சரித்துள்ளனர்.

தனது கட்சியினரின் அறிவுறுத்தலை மீறி டிரம்ப் இவ்வாறு அறிவித்துள்ளதால், அது நடைமுறைக்கு வந்தால், அமெரிக்காவின் அண்டை நாடான கண்டவுடன் கடும் பிளவு ஏற்படும் என கூறப்படுகிறது.

உலகச்செய்திகள்