பிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிராக ஐ.நா, பிரிட்டனுக்கு அறிக்கை,

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிற்கு எதிராக, ஐக்கிய நாடுகள் அமைப்பின் முன்னாள் அதிகாரி யஸ்மீன் சூகா, ஐ.நாவுக்கும் பிரிட்டனுக்கும் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார் என்று சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிரிட்டனுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகராக பிரிகேடியர் பிரியங்க கடமையாற்றி வருகின்றார். சுதந்திர தின நிகழ்வுகளின் போது பிரிகேடியர் பிரியங்க, புலம்பெயர் தமிழர்களின் கழுத்தை அறுப்பதாக சைகை செய்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், பிரிகேடியர் பிரியங்கவிற்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்தி யஸ்மீன் சூகா அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளதாக சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு வைத்தியசாலையை தாக்கி அழித்ததாக பிரிகேடியர் பிரியங்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஏழு பக்கங்களைக் கொண்டு அறிக்கைகள் பிரிட்டனுக்கும், ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. லண்டனில் பிரிகேடியர் அச்சுறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட தினத்திற்கு அடுத்த நாள் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த அறிக்கையை தயாரிப்பதற்கு இலங்கையிலிருந்து ஜெர்மனிக்கு தப்பிச் சென்ற நபர் ஒருவர் ஒத்துழைப்பு வழங்கியுள்ளார். பிரிகேடியரின் தலைமையிலான படைப்பிரிவு முல்லைத்தீவு வைத்தியசாலை மீது தாக்குதல் நடத்தியதாக அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

உலகச்செய்திகள்