கழுத்து வெட்டுவதாக மிரட்டிய பிரிகேடியருக்கு பிரித்தானியாவால் ஏற்பட்ட கதி!

கழுத்தை அறுப்பதாக சைகை காட்டிய இலங்கை இராணுவப் பிரிகேடியரான பிரியங்கரவை உடனடியாக லண்டனில் இருந்து இலங்கைக்கு திரும்புமாறு தாம் உத்தரவிட்டதுடன், அந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது என்றும் பிரித்தானிய அரசாங்கத்துக்கு இலங்கை தகவல் வழங்கியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஆசிய-பசுபிக் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் மார்க் பீல் இந்த தகவலைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரிடம் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் கிளைவ் எபோர்ட் கேள்வி எழுப்பியுள்ளார். அந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது, ”வெறுப்பைத் தூண்டும் சம்பவம் ஒன்று எமது வீதியில் மேற்கொள்ளப்பட்டது. அந்த சம்பவம் தொடர்பாக இலங்கையின் பிரிகேடியர் விசாரிக்கப்படுவாரா?” என்று பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் கிளைவ் எபோர்ட், கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மார்க் பீல், இந்தச் சம்பவத்தை நாம் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளோம். இதுகுறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் பேசியிருந்தேன். இலங்கை அரசாங்கமும் இதனை தீவிரமாக எடுத்துக் கொண்டிருக்கிறது என நம்புகிறோம். இதற்காகத்தான் பிரியங்கவை உடனடியாக லண்டனில் இருந்து கொழும்பு திரும்புமாறு உத்தரவிட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது என்றும் பிரித்தானிய அரசாங்கத்துக்கு இலங்கை தகவல் தெரிவித்துள்ளது. என்றார்.

இதேவேளை பிரிகேடியர் நாட்டுக்கு அழைக்கப்பட்டமை குறித்து நேற்றைய தினம் இலங்கை இராணுவப் பேச்சாளர் உறுதிப்படுத்தியிருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.