இலங்கையில் செயற்கை மழையை ஏற்படுத்த நிபுணர்கள் குழு!

இலங்கையில் செயற்கை மழையை ஏற்படுத்துவதற்காக இலங்கை வந்துள்ள தாய்லாந்து தொழில்நுட்ப நிபுணர் குழு இன்று தமது பணிகளை ஆரம்பிக்க உள்ளது.இவர்கள் இன்று முதல் நீர்த்தேக்கங்களை அண்மித்த சில பகுதிகளை ஆய்வு செய்யவுள்ளதாக மின்சக்தி மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்றும் நாளையும் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 59 வீதம் வரை குறைவடைந்துள்ளதால் நீர்மின் உற்பத்தி மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இடம்பெறுவதாக மின்சக்தி மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் ஊடக பேச்சாளர் கூறியுள்ளார்.

செயற்கை மழையை வழங்க தாய்லாந்து நாட்டு ஆய்வுக் குழு மலையகத்திலுள்ள பிரதான நீர்தேக்கங்களான காசல்ரீ மற்றும் மவுசாகலையில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.தாய்லாந்து நாட்டின் அனுமதியுடன் அங்கீகாரம் பெற்ற நிறுவனமாக விளங்கும் குறித்த நிறுவனர் உலகில் பல நாடுகளில் செயற்கை மழையை பெய்ய வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், 1981ஆம் ஆண்டு காசல்ரீ மற்றும் மவுசாகலை நீர்தேக்கங்களுக்கு செயற்கை மழையை பெய்ய வைத்ததாகவும் தாய்லாந்து நாட்டு ஆய்வு குழுவினர் தெரிவித்தனர்.

இந்த செயற்கை மழையினால் மனிதர்களுக்கோ, விலங்குகளுக்கோ, சூழலுக்கோ பாதிப்புகள் ஏற்படாது என்றும் ஒருவகை பதார்த்தத்தை பயன்படுத்தியே செயற்கை மழையை தோற்றுவிப்பதாகவும், இதற்காக இலங்கை விமானப் படையின் விமனங்களும் உலங்குவானூர்திகளும் பயன்படுத்தவுள்ளதாக குறிப்பிட்டனர்.

காசல்ரீ மற்றும் மவுசாகலை நீர்தேக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இலங்கை மின்சாரசபையினர், மத்திய மாகாண சூழல் பாதுகாப்பு அதிகாரிகள், மகாவளி திட்ட அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.தொடந்து கொத்மலை, விக்டோரியா, ரந்தனிகல நீர்தேக்கங்களிலும் மேற்படி ஆய்வினை மேற்கொள்ளவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்

Allgemein