மாநகர முதன்மை வேட்பாளர் யார்?? –

“யாழ். மாநகர சபையில் ஆட்சியமைக்கும்போது எமது கட்சி முதலன்மை வேட்பாளர் வி. மணிவண்ணன் மேயராக நிறுத்தப்படுவார்” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

மாநகரசபை உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றங்களில் ஒரு இரகசிய வாக்கெடுப்பிற்கு இணங்குங்கள் யார் ஆட்சியமைக்கின்றார்கள் என்று பார்ப்போம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சவால் விடுத்துள்ளார்.

மாற்றுக் கட்சிகளுக்கு ஆதவளித்தால் பதவி நீக்கம் செய்யப்படுவீர்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் புதிதாக உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடும்வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளமை தொடர்பில் இன்று (17.02.2018) சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கேள்வி எழுப்பியபோதே அவர் இவ்வாறு சவால் விடுத்துள்ளார்.

அங்கு மேலும் குறிப்பிட்ட அவர்,

ஒரு பயமும் இல்லாமல் இரகசிய வாக்கெடுப்பிற்கு திரு.சோனாதிராஜா இணங்கினால் யார் ஆட்சியமைக்கப்போவது? யாருக்கு பெரும்பான்மை இருக்கிறது? அவருடைய கட்சி உறுப்பினர்களே அவர்களுக்கு வாக்களிப்பார்களா என்ற உண்மை தெரிந்துவிடும்.

ஆனால் பயத்தின் அடிப்படையில் இரகசிய வாக்கெடுப்பிற்கு இணங்காமல் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் மிரட்டும் தொனியில் கூட்டமைப்புக்கு எதிராக வாக்களித்தால் உடனடியாக பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று மிரட்டி தங்களுடைய வேட்பாளர்களுக்கு எதிராக ஒரு பயங்கரவாதத்தைத் திணித்துத்தன் தங்களுடைய வேட்பாளர்களை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயல்கின்றார்கள்.

நீங்கள் ஏன் பயப்படுகின்றீர்கள். ஒரு இரகசிய வாக்கெடுப்பிற்கு இணங்குங்கள் யார் ஆட்சியமைக்கின்றார்கள் என்று பார்ப்போம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மாறிவந்து தமிழ்த் தேசியப் பேரவைக்கு வாக்களிப்பார்கள் என்ற அச்சத்தினாலேயே அவர்கள் இரகசிய வாக்கெடுப்பை நிராகரித்து தமது வேட்பாளர்களை மிரட்டும் வகையில் அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.

கூட்டமைப்பின் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற உறுப்பினர்கள் அவர்களுக்கு எதிராக வாக்களிக்க தயாராகவே இருக்கின்றார்கள் என்பதற்கு இது ஒன்றே போதும்” – என்றார்.

இச்சந்திப்பில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்களால் யாழ். மாநகர சபை உள்ளிட்ட ஏனைய சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக கேள்வி எழுப்பினர் இதற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“யாழ் மாநகர சபையில் ஆட்சி அமைக்கும் போது இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும் பட்சத்தில் அதிக உறுப்பினர்கள் மணிவண்ணனை தெரிவு செய்வார்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களில் கணிசமானவர்கள் மணிவன்னணை மேயராக தெரிவதற்கு வாக்களிப்பார்கள். இதில் சந்தேகம் இல்லை.

இந்த இரகசிய வாக்கெடுப்பில் வேறு யாரும் கூடுதலான வாக்குகளை பெற்று பெரும்பான்மையுடன் மேயராக தெரிவுசெய்யப்பட்டால் அவர் நிர்வாகத்தை நடத்த முடியும்.

அவ்விடயத்தில் நாங்கள் பொறுப்புடன் நடந்து கொள்வோம். நாங்கள் விரும்பாத பகுதியைச் சேர்ந்தவர் நிர்வாகத்தை அமைத்தால் நாங்கள் குழப்பத்தை ஏற்படுத்தப் போவதில்லை.

ஆனால், அந்த சபையில் மக்களுடைய நலனுக்கு விரோதமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் அந்த விடயத்தை நாங்கள் கடுமையாக எதிர்ப்போம். அதற்கு தயங்க மாட்டோம்.

இரகசிய வாக்களிப்பு தொடர்பில், அல்லது ஆட்சி அமைப்பது தொடர்பில் நாங்கள் வேறு எந்த கட்சியுடனும் பேசவில்லை. அப்படியான பேச்சுக்களை நடத்தப் போவதும் இல்லை.

ஆனால், தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள சிலர் எம்முடன் இது தொடர்பில் பேசியுள்ளார்கள். எமது வேட்பாளருக்கு ஆதரவு தர விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.

வேறு கட்சிகளின் தனி நபர்களும் எங்களுடன் பேசியுள்ளார்கள். இதனடிப்படையிலேயே ஆட்சியமைப்பது தொடர்பில நாங்கள் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.

உள்ளூராட்சி சபைகளில் தலைமை வகிக்கும் நபர்கள் யார் என்பது முக்கியம் இல்லை.

ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் யாழ். மாநகர முதன்மை வேட்பாளர் இமானுவேல் ஆர்னோல்ட் பல இடங்களில் மதவாதத்தை கையில் எடுத்து, தான் ஒரு கிறிஸ்தவர் என்றதால் தமிழ் தேசிய பேரவை தன்னை எதிர்ப்பதாக வழமை போன்று அப்பட்டமான பொய்யை சொல்லி வருகின்றார்.

இதே போன்று நல்லூர் பிரதேச சபை, சாவகச்சேரி மற்றும் பருத்தித்துறை நகர சபைகள் உட்பட குறைந்த பட்சம் ஐந்து சபைகளில் தமிழ் தேசிய பேரவை ஆட்சியமைக்கும்” என்றார்.

தாயகச்செய்திகள்