தமிழ்த் தேசியத் தலைமைகள் ஒன்றினைவது காலத்தின் கட்டாயம் எனத் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினருமான சபா குகதாஸ். அவர் பின்வருமாறு தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தீவில் தேர்தல் முடிவுகள் சிங்கள தேசியம் பெரும்பாண்மை பலத்தை உறுதிப்படுத்தியதுடன் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. ஆனால் வட கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் தேசியக் கட்சிகள் பலவீனப் பட்டு உடைவடைந்த நிலையை தேர்தல் முடிவுகள் உணர வைத்துள்ளது. இந்த நிலை தமிழ் மக்களின் இருப்பை கேள்விக் குறியாக்கியுள்ளது.
தமிழ் மக்கள் தமது தேசிய அபிலாசைகளை பெறுவதற்காக கொடுத்த விலை என்பது அளவிட முடியாதது. ஏனைய இனங்களுடன் ஒப்பிடுகையில் நமது இனம் இரண்டு தலைமுறை வாழ்வை அழித்தது மாத்திரம் அல்ல பொருளாதாரம். அறிவியல். கல்வி. வாழ்க்கைத்தரம் போன்ற விடையங்களில் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது.
யுத்தம் குறிப்பாக இறுதிப்போர் முள்ளிவாய்க்கால் கொடுத்த அவலம் வரலாற்றில் மறக்க மன்னிக்க முடியாத கொடூரம். இந்தப் போர் எம் இனத்தில் அநாதைகள். ஏழைகள். ஏதிலிகள். அகதிகள். மாற்றுத்திறனாளிகள் என பல சொல்ல முடியாத துயரங்களை தந்துள்ளது.
இனியும் நாம் மக்களை உணர்ச்சி வசப்படுத்தாது அவர்களது உணர்வுகளுக்கு தலைசாய்த்து ஒட்டு மொத்த இருப்பையும் தக்க வைக்க ஏற்ற இறக்கங்களை கடந்து ஒன்றினைய தவறினால் இலங்கைத் தீவில் தமிழ் மக்களின் தேசிய இருப்பை காப்பாற்ற முடியாத துயர நிலைக்கு உள்ளாக வேண்டும்.