சிறிலங்கா ரூபா ஒரே நாளில் 60 சதம் சரிந்தது!

சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களால், அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு நேற்றும் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

நேற்று அமெரிக்க டொலர் ஒன்றுக்கு எதிரான  சிறிலங்கா ரூபாவின் மதிப்பு 60 சதத்தினால் குறைந்து, 156.74 ரூபாவாக வீழ்ச்சியடைந்தது.

உள்ளூராட்சித் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன முன்னணி வெற்றிபெற்றதை அடுத்து ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களாலேயே பொருளாதார உறுதியற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பெப்ரவரி 14ஆம் நாளுடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டு பெப்ரவரி 14ஆம் நாள், அமெரிக்க டொலருக்கு எதிராக, சிறிலங்கா ரூபாவின் மதிப்பு 4.29 ரூபாவினால், சரிந்துள்ளது. இது 2.81 வீத வீழ்ச்சியாகும்.

2017 பெப்ரவரி 14ஆம் நாள் அமெரிக்க டொலர் ஒன்றின் மதிப்பு, 152.45 ரூபாவாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.