நள்ளிரவில் குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து:

சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் ஒரு குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட பெரிய தீ விபத்தில் 8 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜெனிவாவில் (Geneva) உள்ள ஃப்ளோரிசாண்ட் (Florissant) மாவட்டத்தில் கடந்த வெள்ளிக் கிழமை நள்ளிரவில் குடியிருப்பு பகுதி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மண்டல பொலிசார் இதுபற்றி கூறுகையில், நள்ளிரவு 2 மணிக்கு எச்சரிக்கை மணி ஒலித்ததையடுத்து 15 தீயணைப்பு குழுக்கள் மற்றும் 5 அவசர உதவி ஊர்திகளை சம்பவ இடத்திற்கு அனுப்பியதாக தெரிவித்துள்ளனர்.

தீயணைப்பு குழுவின் தலைவர் இதுபற்றி கூறுகையில், நாங்கள் அங்கு சென்றபோது முதல் மாடியில் இருந்த குடியிருப்புகள் அனைத்தும் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது.

இதையடுத்து மீட்பு பணியில் ஈடுபட்ட நாங்கள் 43 பேரை அங்கிருந்து காப்பாற்றியதோடு அங்கிருந்த தீயை 40 நிமிட போராட்டத்திற்கு பின் கட்டுக்குள் கொண்டுவந்தோம் என்று தெரிவித்துள்ளார்.

பலத்த தீக்காயமடைந்த 8 பேரில் மூவரை ஹெலிகாப்டர் மூலம் லாசன்னேவில் உள்ள மருத்துவமனைக்கு உடனடியாக தூக்கி சென்றுள்ளனர்.

காயமடைந்த மற்றவர்கள் மற்றும் புகை மூட்டத்தால் சுவாசிக்க சிரமப்பட்டவர்களுக்கு அவசர உதவிக் குழு சிகிச்சை அளித்ததாக ஜெனிவா மண்டல பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், தற்போது இந்த தீ விபத்திற்கான காரணத்தை கண்டறிய பொலிசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

உலகச்செய்திகள்