அரசாங்கத்திடம் பிச்சைகேட்டு எடுத்தோமானால் பிச்சைக்காரர்களாகவே இருக்க வேண்டும்.

அரசாங்கத்திடம் பிச்சைகேட்டு எடுத்தோமானால் சதா காலமும் பிச்சைக்காரர்களாகவே இருக்க வேண்டும்.

தமிழ் மக்களை பலமற்றவர்களாக மாற்றி, அவர்களை வாங்கிவிடலாம் என அரசாங்கம் நினைக்கின்றது. நாமும் அதற்கேற்றாற்போலவே நடந்துகொள்கிறோம்.

இதனை விடுத்து, நாங்கள் பலமுள்ளவர்களாக மாறவேண்டும். அப்போதுதான் எங்களிடமிருந்து பறிப்பதை மற்றவர்கள் நிறுத்துவார்கள்” என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களின் கேள்விக்கு வாராந்தம் பதிலளித்துவரும் முதலமைச்சரிடம் வினவப்பட்ட கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் மேற்குறித்தவாறு குறிப்பிட்டார்.

முதலமைச்சர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-

”சிங்கள அரசியல் தலைவர்கள் தமக்கு என்ன வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாகவும் திடமாகவும் உள்ளார்கள். நாங்கள் எமக்குள் தெளிவின்றி நடைமுறைப்படுத்த வேண்டிய வழிமுறைகள் பற்றிய சிந்தனையின்றி காற்றினால் கொண்டு செல்லப்படும் கடதாசி போல் நடந்து வருகின்றோம்.

அரசாங்கத்துடன் சேர்ந்து பொருளாதார நன்மைகளைப் பெற ஏன் பின்னிற்கின்றீர்கள் என சிலர் இன்னும் எம்மை பார்த்து கேள்வி கேட்கின்றனர்.

பொருளாதார நன்மைகளைத் தந்து எம்மை ஆறுதல்படுத்துவதானது, எமது முக்கியமான உரிமைகளை மத்திய அரசாங்கம் வைத்திருப்பதற்காகும். பொருளாதார விருத்திகளைத் தந்துவிட்டோம் என்று கூறி எமது வரலாற்றுப் பிறப்புரிமைகளை அவர்கள் கைவசம் வைத்திருப்பர். ஆகவே முழுமையான ஒரு பரந்த சிந்தனையுடன் எங்களைச் சுற்றி நடப்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பொருளாதார நன்மைகள் முக்கியம்தான். ஆனால் அவற்றை நாம் எமது புலம்பெயர்ந்தோர் ஊடாகவும் பெறலாம். சர்வதேச உதவிகளுடாகவும் பெறலாம். அரசாங்கத்திடம் பிச்சைகேட்டு எடுத்தோமானால் சதா காலமும் பிச்சைக்காரர்களாகவே இருக்க வேண்டும்.

அரசாங்கம் தாமாகக் கொடுப்பது வேறு நாம் திருவோடு ஏந்தும் நிலை வேறு. அவர்களிடம் தஞ்சம் புகுந்தவுடன் நடப்பது என்ன? தமக்கு வேண்டியவற்றை அவர்கள் சாதித்துக் கொள்வார்கள். காணிகளைக் கேட்பர், அவர்கள் இங்குவந்து தொழில் செய்யக் கேட்பர், ராணுவம் தொடர்ந்திருக்கக் கேட்பர்.

நாங்கள் அவர்களிடம் பொருளாதார நன்மைகளை பெற்றால் இவற்றிற்கு மறுப்பு தெரிவிக்க முடியாது. எமது தனித்துவத்தை இழந்துவிட்டிருப்போம். அந்த நிலைக்கு நாம் சென்றுவிடக் கூடாது” என்றார்.

தாயகச்செய்திகள்