புதுக்கோட்டையைப் பதறவைத்த சாதி வன்கொடுமை..

பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஐந்து பேரை, மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கட்டிவைத்து அடித்திருக்கிறார்கள். இந்த சம்பவத்தைப் போலீஸார் திட்டமிட்டு மறைத்துவிட்டனர்’ என்கின்றனர், மனித உரிமை ஆர்வலர்கள்.

கடந்த ஜனவரி மாதம் இரண்டாவது வாரம், வாட்ஸ்அப் குழுக்களுக்கு ஒரு செய்தி படத்துடன் பகிரப்பட்டது.  பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 5 இளைஞர்களை அரை நிர்வாணத்துடன் மாற்று சமூகத்தைச் சேர்ந்த சிலர், மரத்தில் கட்டிவைத்து சாதியக் கொடுமை செய்வதாக அந்த வாட்ஸ்அப் தகவல் விவரித்தது. அந்தச் சம்பவம் விராலிமலை ஒன்றியம், கிளிக்குடி பஞ்சாயத்துக்குட்பட்ட வலையப்பட்டி என்ற கிராமத்தில் நடந்ததாக, அந்த வாட்ஸ்அப் செய்தியில் தவறாகச் சொல்லப்பட்டிருந்தது. இதையடுத்து, அந்தத் தகவலை விசாரித்தபோது, அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்ற செய்தி கிடைத்தது.

புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி., செல்வராஜிடம் கேட்டபோது, “அந்த ஐந்து இளைஞர்களும்  செல்போன் திருடர்கள். வன்கொடுமை சம்பவம் எதுவும் நடக்கவில்லை’ எனக் கூறியிருக்கிறார். இப்போது, சம்பவ இடத்தில் நடந்தது என்ன என்ற தகவல் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட ஐந்து இளைஞர்களில் சுப்பிரமணியன், சந்தோஷ் உள்ளிட்ட மூன்று பேர் நேற்று பகுஜன் சமாஜ் கட்சியின்  தேசிய ஒருங்கிணைப்பாளர் ராம்ஜி கௌதம் தலைமையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்துப் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட இளைஞர்களிடம் பேசினோம். ‘பட்டியலின இனத்தைச் சேர்ந்த நாங்கள் ஐந்துபேர்,  கடந்த மாதம் வலையப்பட்டி கிராமத்தில் நடந்த அன்னதான  விழாவுக்குச்  சென்றோம். அங்கு நாங்கள்  வேட்டியை மடித்துக் கட்டியிருந்தைப் பார்த்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த சிலர்,  உயர் சாதி வகுப்பைச் சேர்ந்த சிலர், எங்கள் சாதிப்பெயரைச் சொல்லிக் கேவலமாகத் திட்டினார்கள். அத்துடன், எங்கள் ஐந்து பேரையும் கட்டிவைத்து  கடுமையாகத் தாக்கினார்கள். அவமானப்படுத்தியும் கேவலப்படுத்தியும் அவர்கள்செய்த வன்கொடுமைகளைப் பொறுமையுடன் நாங்கள் சகித்துக்கொண்டோம். பிறகு, ஊருக்கு வந்ததும் எங்களுக்கு நடந்த கொடுமைகளைச் சொன்னோம். மறுநாள்,  எங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்களுடன் நாங்களும் எங்களை அடித்தவர்களிடம் விளக்கம் கேட்கச்சென்றோம். அப்போதும் எங்களைக் கேவலப்படுத்தினார்கள். ஊர்ப் பொதுவெளியில் உள்ள ஆலமரத்தடியில் எங்களை அரை நிர்வாணப்படுத்தி, கைகளைப் பின்புறம் கட்டி மண்டியிட வைத்து, தொடர்ந்து சாதிப் பெயரைச் சொல்லித் தாக்கினார்கள். இதுகுறித்து போலீஸாரிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. அதனால், இன்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுக்க வந்தோம். சாதிப் பெயரைச் சொல்லி எங்களைக் கட்டிவைத்துத் தாக்கியவர்கள் மீது  சாதிய வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர் வேதனையோடு.

பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ராம்ஜி கௌதமிடம் பேசினோம். ‘இந்த இளைஞர்களுக்கு நேர்ந்த கொடுமைகுறித்து வாட்ஸ்அப்பில் அப்போதே தகவல் பரவியது. ஆனால், அந்தச் சம்பவம் வெளிச்சத்துக்குக் கொண்டுவராமலேயே திட்டமிட்டுத் தவறான தகவல்களைப் பரப்பி மறைத்துவிட்டார்கள்’ என்றார் சீற்றத்துடன்.

இந்தச் சம்பவம்குறித்து புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜைத் தொடர்புகொண்டு பேசினோம்.  ‘தைப்பூசம் நிகழ்ச்சிக்குச் சென்ற அந்த இளைஞர்கள், செல்போனைத் திருடியிருக்கிறார்கள். செல்போனைப் பறிகொடுத்தவர்கள், ‘ அந்த இளைஞர்கள்தான் திருடி இருக்கிறார்கள்’ என்பதை அறிந்து அவர்களது ஊர்க்காரர்களிடம் கேட்டிருக்கிறார்கள். அவர்களது சமூகத்தைச் சேர்ந்தவர்களே அவர்களை செல்போன் திருடியதற்காகக் கட்டிப்போட்டிருக்கிறார்கள். விஷயம் அறிந்து, போலீஸார் அங்கு சென்று அந்த இளைஞர்களை மீட்டிருக்கிறார்கள். திருடிய செல்போனைத் திருப்பித் தந்துவிடுவதாக எழுதிக்கொடுத்துவிட்டுச் சென்ற அந்த இளைஞர்கள், அதன்பிறகு வரவில்லை. நேற்று சாதி வன்கொடுமை செய்ததாக கலெக்டரிடம் மனு கொடுத்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில் புகாரைப் பதிவுசெய்யும்படி சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் உள்ள இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட்டிருக்கிறேன்’என்றார்.

உலகச்செய்திகள்