மகிந்தவின் வெற்றிக்கு காரணம் என்ன?

ஒப்பீட்டளவில் அமைதியாக நடந்து முடிந்திருந்தாலும் இலங்கையின் இந்த உள்ளூராட்சி தேர்தல் இரண்டு விசயங்களை வலுவாக கோடிகாட்டிச் சென்றிருக்கிறது.

ஒன்று தென்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கணிசமான வெற்றி. அடுத்தது வடக்கு கிழக்கு தமிழ் பகுதிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பின்னடைவு.

மஹிந்தவின் வெற்றி

வன்முறை, ஊழல் போன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வீழ்த்தப்பட்டார். தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் கணிசமாக அவருக்கு எதிராக அப்போது வாக்களித்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆனால், இந்த உள்ளூராட்சி சபை தேர்தல்களில் அவரது பொதுஜன பெரமுன கட்சி அமோக வெற்றியை பெற்றிருக்கிறது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி பாரம்பரியமாகவே பலமாகத்திகழும் தலைநகர் கொழும்பு போன்ற இடங்களைத் தவிர ஏனைய இடங்களில் ராஜபக்ஷவே பெருவெற்றியை பெற்றுள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சொந்த ஊரான பொலன்நறுவையிலும் சில இடங்களில் மஹிந்த அணி ஊடுருவி உள்ளது.

மலையகம்

பொதுவாக மலையகத்தின் நுவரெலியா மாவட்டத்தில் மஹிந்த அணிக்கு பெரிய ஆதரவு இருப்பதாக கூறமுடியாது. ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது அரசாங்கத்தில் அங்கம் வகுக்கும் மலையக கட்சிகளான அமைச்சர் திகாம்பரத்தின் கட்சி மற்றும் மலையக மக்கள் முன்னணி கூட்டணி அங்கு பலம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

ஆனால், இந்த தேர்தலில் மலையகத்தில் பல சபைகளில் அங்கு பலம் வாய்ந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸுடன் சேர்ந்து மஹிந்த அணி ஆட்சியமைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அரசியலில் நிரந்தர நண்பனோ, பகைவனோ கிடையாது என்று கூறும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரான கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன், இ.தொ.கா – மஹிந்த அணி கூட்டாக பல சபைகளில் ஆட்சி அமைத்தாலும் மக்களுக்கு நன்மை பயப்பதாக அது இருக்க வேண்டும் என்று கூறினார்.

மஹிந்த வெற்றிக்கான காரணம்

‘வெள்ளைவான் கடத்தல் கலாச்சாரம், ஊழல் ஆகியவைதான் கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வைத்த குற்றச்சாட்டு.

அவரது ஆட்சி மாறிய பின்னர், இங்கு அப்படியான வன்செயல்கள் குறைந்திருக்கின்றன அல்லது இல்லாது போய்விட்டன என்பது உண்மைதான்’ என்று கூறும் கொழும்பில் உள்ள ஒரு இந்திய செய்தியாளர், ஆனால் தற்போதைய அரசில் எந்த விதமான முன்னேற்றமும் நடக்கவில்லை என்பது தற்போது மக்களுக்கு பெரும் சுமையாக தெரிவதாகக் கூறுகிறார்.

போருக்கு பின்னர் இலங்கை முழுவதும் பெருந்தெருக்களை அமைத்து வசதி செய்தார் மஹிந்த ராஜபக்ஷ. ஆனால், இப்போது மாநகர சபைக்கு உட்பட்ட தெருக்கள் கூட சீரமைக்கப்படாமல் இருப்பதாக கொழும்பில் வாழும் அந்தச் செய்தியாளர் குறைகூறுகிறார். இதுவே சிங்கள மக்கள் மத்தியில் மீண்டும் ஒரு மஹிந்த அலை ஏற்படக் காரணம் என்கிறார் அவர்.

தொழில் உருவாக்கம், பொருளாதார முன்னேற்றம் என எந்த விதத்திலும் ஒரு முன்னேற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு தற்போதைய அரசு ஏமாற்றத்தையே தந்துள்ளதாக அவர் கூறுகின்றார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இறக்கம்

தெற்கில் மஹிந்த கணிசமான வெற்றியை குவித்துள்ள அதேவேளை, வடக்கு கிழக்கில் இன்னுமொரு விசயம் அமைதியாக நடந்திருக்கிறது.

அங்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக பார்க்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெரும்பான்மையான உறுப்பினர்களை பெற்றிருந்தாலும், இந்த தேர்தல் அதற்கு ஒரு பின்னடைவாக பலராலும் பார்க்கப்படுகின்றது.

தற்போதைய அரசாங்கத்துடன் தாம் முன்னெடுக்கும் தமிழர் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு நடவடிக்கைகளுக்கான ஒரு ஆணையாக இந்த தேர்தலை அந்தக் கட்சி முன்வைத்திருந்தது.

ஆனால், யாழ் மாநகர சபை உட்பட வடக்கு கிழக்கில் பல சபைகளில் அந்த கட்சியால் ஆட்சியமைக்க முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சில இடங்களில் அப்படி அமைப்பதாயின் அவர்கள் தாம் தமிழர் எதிரிகளாக வர்ணித்த சில கட்சிகளோடு கூட்டுச் சேர வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

வடக்கில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ் காங்கிரஸும் கூட சில சபைகளில் கணிசமான வெற்றியை பெற்றுள்ளன. கிழக்கில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் சில இடங்களில் சிறப்பான வெற்றிகளை பெற்றிருக்கிறது.

இதனைவிட சிங்களக் கட்சிகளாக தமிழ் தேசியத்தரப்பால் வர்ணிக்கப்படும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியனவும் அங்கு சில வட்டாரங்களை கைப்பற்றியுள்ளன.

மக்களின் கருத்தை பொருட்படுத்தாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களின் போக்குக்கு கிடைத்த பெரிய அடிதான் இந்த முடிவுகள் என்று வர்ணிக்கும் மூத்த பத்திரிகையாளரான வித்யாதரன், அந்தக் கட்சியின் அடித்தளத்துக்கே பலமான அடி விழுந்துள்ளதாக கூறுகிறார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சித்தார்த்தன் கருத்து

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இந்த முடிவுகள் சற்று பின்னடைவே என்பதை ஒப்புக்கொள்ளும் அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் காங்கிரஸ் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவற்றுக்கு மாத்திரமல்லாமல், சிங்களக் கட்சிகளுக்கும் மக்கள் வாக்களித்திருப்பது வேலைவாய்ப்பு மற்றும் அத்தியாவசிய தேவைகள் குறித்த அவர்களது வாக்குறுதிகளுக்காக என்கிறார்.

சமாந்தரமான இரு வழி பாதையாக தமிழர் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு மற்றும் மக்களின் உடனடித்தேவைகளை பூர்த்தி செய்தல் ஆகியவை இருக்க வேண்டும் என்பது தனது கருத்தாக இருக்கின்ற போதிலும், அதில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பல விதமான பிரச்சினைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை இரண்டாம் பட்சமாக கருதிவிட்டது என்றும், ஆனால், மக்கள் அவற்றை முதல் பிரச்சினையாக கருதுவதையே தேர்தல் முடிவுகள் காண்பிப்பதாகவும் கூறுகிறார்.

அதுமாத்திரமன்றி தமிழர் பிரச்சினைக்கான தீர்வு நடவடிக்கைகளும் இனி சிரமமானதாக இருக்கும் என்றும் அவர் கூறுகின்றார்.

இதற்கிடையே இந்த தேர்தல் வெற்றியை அமைதியாக கொண்டாடும்படி மஹிந்த ராஜபக்ஷ தனது ஆதரவாளர்களை கேட்டுள்ளார்.

தேர்தல் முடிவுகளை அடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தில் சில மாறுதல்களை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுவதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதேவேளை, கூட்டு எதிர்க்கட்சிகளின் தலைவரான தினேஸ் குணவர்த்தனவோ, மக்கள் இந்த அரசாங்கத்துக்கு கொடுத்த ஆணை காலவதியாகிப்போய் விட்டதால் அவர்கள் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

நேரடி மற்றும் விகிதாசார தேர்தல்களின் கலப்புமுறையில் நடந்த இந்த தேர்தலின் முடிவுகள் அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களை சற்று குழப்பிவிட்டிருக்கிறது.

வாக்குகளை எண்ணி ஆட்களை தேர்வு செய்வதில் இந்தத் தடவை தேர்தல் ஆணையமும் பெரும் கால தாமதத்தை எதிர்கொண்டது. வாக்குகளை எண்ணி கணிக்கும் முறை புதிது என்பது அதற்கான காரணமாக அதிகாரிகளால் கூறப்படுகின்றது.

அதேவேளை அரசாங்கத்தின் மற்றும் தேர்தலில் வென்ற தரப்புகளின் அடுத்த கட்ட நகர்வுகளை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பல இடங்களில் ஆட்சியமைப்பதிலும் சிக்கல்கள் காணப்படுகின்றன. தேர்தல்கால எதிரிகள் நண்பர்களாகும் சூழ்நிலையும் பல இடங்களில் ஏற்படலாம்.

Allgemein