சீனாவில் சந்தேக நபர்களை பிடிக்க போலீஸுக்கு உதவும் மூக்குக் கண்ணாடி

மனித முகங்களை இனம் காணக்கூடிய தொழில்நுட்பத்துடன் கூடிய மூக்கு கண்ணாடியை அணிந்து சந்தேகத்திற்குரிய குற்றவாளிகளை கண்டுபிடிக்க சீனப் போலீஸார் தொடங்கியுள்ளனர்.

இந்த மூக்கு கண்ணாடி சந்தேகத்திற்குரிய மனித முகங்கள் பதியப்பட்டு இருக்கும் கணினித் தரவுகளோடு இணைக்கப்பட்டிருக்கும். இதனால் கூட்டத்தை பார்க்கும் போது சந்தேகத்திற்குரிய நபரை சுலபமாக அடையாளம் கண்டுக் கொள்ள முடியும்.

சீனா நகரமான ட்செங்சௌவில் சந்தேகத்திற்குரிய ஏழு பேரை கைது செய்ய இந்த கண்ணாடி உதவியதாக சீன அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

போலி அடையாள அட்டை பயன்படுத்திய 26 பேரையும் காவல்துறையினர் இனம்கண்டுள்ளனர்.

அரசியல் எதிர்ப்பாளர்களையும், இன சிறுபான்மையினரையும் பின்தொடர இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படலாம் என்றும், சர்வாதிகாரப் போக்குடைய சீன அதிகாரிகளின் கரங்களுக்கு இது வலுவூட்டும் என்றும் விமர்சகர்கள் அஞ்சுகிறார்கள்.