மீண்டும் பறிபோகுமா கொலைமிரட்டல் விடுத்த பிரியங்கவின் பதவி..?கொலைமிரட்டல் விடுத்த பிரியங்கவின் பதவி..?

லண்டனில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கை உயர்ஸ்தானிகரக அதிகாரிக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்று இயங்கும் விடுதலைப் புலிகளது அமைப்பு இந்த எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகரகத்துடன் இணைந்த இராணுவ அதிகாரியான பிரிகேடியர் பிரியங்க ஃபெர்ணாண்டோ, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தமிழர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் சைகை புரிந்தமை சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இதற்கு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு உள்ளிட்டத் தரப்புகளில் இருந்து கண்டனம் வெளிப்படுத்தப்பட்டது.

இதனை அடுத்து அவரை தற்காலிகமாக ராஜதந்திர பொறுப்புகளில் இருந்து விலக்கி வைக்க இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தீர்மானித்திருந்தது.

எனினும் ஜனாதிபதியின் தலையீட்டில் குறித்த அதிகாரிக்கு மீண்டும் ராஜதந்திர பொறுப்புகள் கையளிக்கப்பட்டன.

இதற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

சர்வதேச சட்டத்திடம் இருந்து அவருக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில், அவருக்கு மீண்டும் ராஜதந்திர வரப்பிரசாதம் வழங்கப்பட்டிருப்பதாகவும், இதனை பிரித்தானிய அரசாங்கம் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும், அந்த அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தாயகச்செய்திகள்