முன்னாள் போராளிகளுக்கு ஆதரவு வழங்குங்கள் – கந்தசாமி இன்பராசா

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் போராளிகளுக்கு மக்கள் ஆதரவு வழங்கவில்லை ஆயின் சுமந்திரன் போன்ற துரோகிகள் வெளிநாடுகளுக்கு சென்று விடுதலை புலிகளுக்கு மக்கள் ஆதரவு வழங்கவில்லை என்ற செய்தியை பரப்புவார்கள் என புனர் வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலை புலிகள் கட்சி தெரிவித்துள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் என அக்கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா கூறியுள்ளார்.

புனர் வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலை புலிகள் கட்சி சார்பாக மூதூர் பிரதேச சபையில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று திங்கட்கிழமை மாலை மூதூர் வீரமாநகரில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சாதாரண சிப்பாய்களாக தாம் போராடிய போது பங்கருக்குள் ஒழிந்திருந்த கருணா போன்றவர்களுக்கு மக்கள் ஆதரவை வழங்கியிருந்த நிலையில், பல போராட்ட களமுனைகளை கண்ட தாமும் தற்போது ஜனநாயக நீரோட்டத்தில் கலந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மக்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுக்க வேண்டுமென்பதற்காக உயிரைப் பணயம் வைத்து போராடிய தமக்கு மக்கள் ஆதரவு வழங்குவார்கள் எனவும் கந்தசாமி இன்பராசா நம்பிக்கை வெளியிட்டார்.

தாயகச்செய்திகள்