நீதிகிடைக்காத பல படுகொலைகளில் கொக்கட்டிச்சோலை படுகொலை!! இன்று 31ஆம் ஆண்டு நினைவுதினம்!!!

தமிழ் மக்களின் வரலாற்றில் மறக்கமுடியாத, கறைபடிந்த சம்பங்களுள் ஒன்றாக அமைந்துள்ள கொக்கட்டிச்சோலை படுகொலையின் 31ஆவது ஆண்டு நினைவு இன்று அனுஸ்டிக்கப்பட்டது.

குறித்த ஏற்பாடானது தமிழரசுக்கட்சியின் பட்டிப்பளை கிளையினால் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தலைமையில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது.

கொக்கட்டிச்சோலை படுகொலையை நினைவுகூரும் வகையில் மகிழடித்தீவுச் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிச் சதுக்கத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது 31 ஆண்டுகளை பிரதிபலிக்கும் வகையில் 31 தீபங்கள் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

1987ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொக்கட்டிச்சோலை இறால் பண்ணை, மகிழடித்தீவு, முனைக்காடு, தாண்டியடி மற்றும் அம்பிளாந்துறை போன்ற பிரதேசங்களின் கிராமங்களைச் சுற்றி வளைத்த இராணுவத்தினர் தமிழ் மக்களை வெட்டியும் சுட்டும் கொன்றனர்.

இந்த சம்பவங்களில் 187 தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டதோடு பலர் படுகாயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் தமிழ் மக்கள் மனதில் மாறாத வடுக்களாக நீதிகிடைக்காத பல படுகொலைச் சம்பவங்களில் இதுவும் பதியப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், தமிழ் தேசியத் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாணசபையின் முன்னாள் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரன், மா.நடராஜா ஆகியோர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தாயகச்செய்திகள்