கொசுக்கடி!!

இலங்கையிலே தேர்தல் ஒன்றுக்கான அறிவித்தல்..

ஆசனங்களுக்கான அடிபாடு..

இதோ பிரிந்து செல்கின்றோம்..

அங்கே ஜனநாயகம் புரியாது கிடையாது…

சர்வாதிகாரமாக நடந்து கொள்கிறார்கள்..

கூட்டமைப்புக்கு எதிர் கூட்டு அமைக்கிறோம்..

இல்லை இல்லை நாங்கள் ஒற்றுமையைத்தான் விரும்புகின்றோம்..

பிரிந்து சென்று தனித்தனியே போட்டியிடுவதையும் விரும்புகின்றோம்..

எங்களை ஏமாற்றி விட்டார்கள்..

பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடாத்தி காத்திருந்தோம்..

சரிவரவில்லை.. சரிவந்தது…

என்ற செய்திகள் பழைய செய்திகளாகி, தமிழ் தேசியத்தை உலகுக்கு உணர்த்த த.தே.கூ வுக்கு ஒற்றுமையாக வாக்களியுங்கள் என்ற செய்தி வந்தபோது எலும்புத்துண்டுகளை பங்கிட்டுக்கொள்வதற்கான இழுபறி தற்காலிகமாக நிறைவு பெற்றுருக்கிறது என்ற பெருமூச்சுடன் இந்நிலைமையை இவ்யுகத்தில் மாற்றமுடியாது சசித்துக்கொண்டு வாழ்வதுதான் சிறந்தது என்று முடிவு செய்திருந்தேன்.

ஆனாலும், குழம்பின குளத்தில் குறட்டை பிடிக்கிறத்துக்கு கரப்பை தூக்கிட்டு வெளிக்கிட்டுருக்கிற முகநூல் கொசுக்களின் பதிவுகள் மீண்டுமொருமுறை கோலைத்தூக்க தூண்டியுள்ளது. முகநூல் கொசுக்கடி தாங்கவே முடியவில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழீழக் கோரிக்கையை கைவிட்டது போதாதென்று சமஸ்டியையும் கை விட்டுவிட்டார்களாம். ஓற்றையாட்சிக்குள் தீர்வுக்கு இணங்கி விட்டார்களாம்.

தீர்வில் எப்படிப்பட்ட விடயங்கள் உள்ளடக்கம்பெறவேண்டும் என்று மக்களிடம் கருத்து கேட்க்கப்படவில்லையாம். இடைக்கால அறிக்கையை மக்கள் பார்வைக்கு வைக்க வில்லையாம்.

ஆனால் புலிகள் தாங்கள் முன்வைத்த இடைக்கால நிர்வாக அலகு தொடர்பான முன்மொழிவை மக்கள் பார்வைக்கு வைத்தார்களாம், வன்னியில் ஊற்ரெடுத்த ஜனநாயகப் பேராறு இந்துசமூத்திரத்தில் சங்கமித்து பாக்குநீரிணை எங்கும் பரவியோடியதாக வல்லூறுகளின் இரைச்சல் காதை குடைகின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீது வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுகள் மீது எனக்கு கருத்தொருமைப்பாடு கிடையாது என்பதல்ல இக்கட்டுரையின் நோக்கம்.

மாறாக புலிகளுக்கு ஜனநாயகம், சரி-பிழை, வெளிப்படைத்தன்மை, மக்கள் மயமாக்கம், கொள்கை என்கின்றவை தொடர்பில் பேசுதற்கு அருகதை உண்டா என்பதே.

பிரபாகரன் தனது மாவீரர் நாள் உரை ஒன்றில் தமிழ் மக்கள் என்றுமே தமிழீழம் கோரியதில்லை என்றும் அவர்கள் நியாமானதோர் தீர்வையே எதிர்நோக்கி நிற்கின்றனர் என்றும் கூறியதனூடாக புலிகளின் தமிழீழக் கோட்பாடு கைவிடப்பட்டிருந்தது என்பது மட்டுமல்ல சமஸ்டி என்ற பிடியும் தளர்ந்திருந்ததை அன்று யாவரும் அதிர்சியுடன் நோக்கியிருந்தாலும், சுவருக்கும் காதுண்டென்று புலிகள் உருவாக்கியிருந்த பீதியால் மக்கள் வாய் திறக்கவில்லை.

இன்று ஜனாநாயகம் பேசுகின்ற புலிகள் அன்று ஜனநாயகம் என்ற சொல்லை உச்சரிப்பதற்கான பேச்சுரிமையைக்கூட தடைசெய்திருந்த வண்ணம் அது.

ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளின் உயிரழிவை தொடர்ந்தும் அனுமதிக்கமுடியாது என சர்வதேச சமூகம் ஓர் சமாதானத்திற்கான வழியைதேடுவதில் முனைப்புடன் செயற்பட்டு தீர்வுவொன்றுக்கான தேடுதலை மேற்கொண்டபோது, புலிகள் முன்வைத்த முழுக்கோரிக்கையும் யாது?

பதில் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் „தமிழீழ விடுதலைப் புலிகளை இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்ளவேண்டும்” என்பதாகும்.

தமிழ் மக்களின் „ஏக” பிரதிநிதிகளாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வரவேண்டிய தேவையிருந்திருந்தால் அதற்கான கோரிக்கையை தமிழ் மக்களிடம் முன்வைத்து தேர்தலொன்று மூலமாகவே அதை அடைந்திருக்கவேண்டும்.

மாறாக சிறிலங்கா அரசாங்கத்திடம் சமாதானப்பேச்சென்ற போர்வையில் பூட்டிய குளிரூட்டிய அறைகளிலிருந்து இதை கோரியதன் பின்னால் இருந்திருக்கக்கூடிய பிற்போக்குத்தனத்தை இன்றும் என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை.

இலங்கை அரசாங்கத்திற்கு தமிழ் மக்களுக்கான பிரதிநிதிகளை நிர்ணயிக்கின்ற சக்தி அல்லது அதிகாரம் இருந்திருக்குமாகவிருந்தால் அது ஏன் காலாமாக வடகிழக்கில் தேர்தலில் போட்டியிட்டு தமிழ் கட்சிகளிடம் தோல்வியை தழுவிக்கொண்டது?

தனக்கு விரும்பிய பிரதிநிதிகளை தானே நியமித்துக்கொண்டு அமளி துமளி அற்ற பாராளுமன்றொன்றை நடாத்திச் சென்றிருக்கலாம் அல்லவா?

இதைவாசிக்கின்ற முகப்புத்தக புலிவீரர்கள் நாங்கள் அவ்வாறு எதையும் கேட்வில்லை என்றும் தமிழ் மக்கள் சார்ந்த கோரிக்கைகளையே முன்வைத்தோம் என்றும் அவை இணையங்களில் இன்றும் உள்ளது என்ற வாதத்தையும் முன்வைக்கலாம். ஆம் புலிகள் முன்வைத்த கோரிகைகள் இணையத்தில் உள்ளது.

ஆனால் அது சதாரண தமிழ் மக்கள் வாசித்து விளங்கிக்கொள்ளக்கூடிய மொழியில் இல்லை. வடகிழக்கில் தனித்தமிழில் கருமங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று பிறமொழி பெயர்பலகைகளைக்கூட அடித்து நொருக்கி ஐஸ்கீறீம் போன்ற ஆங்கிலச் சொல்லுக்கு „குளிர் கழி” என புதிய சொற்களை அறிமுகப்படுத்திய புலிகள் தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்ற தீர்வு சம்பந்தமான முன்மொழிவின் தமிழாக்கத்தை மக்களுக்கு வழங்க மறுத்ததன் பின்னணி தெட்டத்தெளிவானது.

lanka-ltte-610x236 கொசுக்கடி தாங்க முடியவில்லை!! - பீமன் (சிறப்பு கட்டுரை) கொசுக்கடி தாங்க முடியவில்லை!! - பீமன் (சிறப்பு கட்டுரை) lanka ltte

இலங்கை அரசாங்கத்துடன் சுமார் ஐந்தாண்டுகள் பேச்சு நடாத்திய புலிகள் அரசாங்திடம் கோரியது புலிகளுக்கான இடைக்கால நிர்வாக சபையே. அதற்கான முன்மொழிவில் :

* இடைக்கால சுயாட்சி அதிகாரசபை வட-கிழக்கின் 8 மாவட்டங்களையும் உள்ளடக்கும் அதில் முஸ்லிம்கள் உரித்துடையவர்களாக இருப்பார்கள்.

* இடைக்கால நிர்வாக சபைக்கான அறுதிப்பெரும்பாண்மையான உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் புலிகளுக்கு வழங்கவேண்டும். (தேர்தல் மூலம் மக்களுக்கு அல்ல)

பிரதம அதிகாரியை உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பார்கள். ( புலிகளால் நியமிக்கப்படுகின்ற உறுப்பினர்கள் யாரை தேர்ந்தெடுப்பார்கள்? )

* ஐந்து வருடங்களுக்கு வடகிழக்கில் தேர்தல் ஏதும் இடம்பெறமுடியாது. (வடகிழக்கு மக்களுக்கு ஜனநாhயக உரிமை வழங்க கூடாது)

* வடகிழக்கில் மனித உரிமைகள் ஆணையகம் ஒன்று நிறுவப்படும். அதற்கான உறுப்பினர்களையும் அலுவலர்களையும் இடைக்கால நிர்வாக சபை உறுப்பினர்களே தெரிவு செய்வர். (அதாவது சர்வதேச மனித உரிமை நிறுவனங்கள் வெளியேற்றப்பட்டு நாங்கள் ஒரு டம்மியை உருவாக்குவோம். )

* இடைக்கால நிர்வாக சபையானது வடகிழக்கை ஆழுகின்ற சகல அதிகாரங்களையும் கொண்டிருப்பதுடன் சகல விதமான வரிகளை அறவிடுவதற்கும் வரிகளை விதிப்பதற்குமான அதிகாரங்களை கொண்டிருக்கும் (அதாவது வன்னியிலிருந்து புலிகளின் கப்பம் பெறுதல் நடைமுறையை சட்டரீதியாக்குவதற்கு சிறிலங்கா அரசு அதிகாரம் வழங்கவேண்டும்.)

* வடகிழக்கிற்கு ஒர் தனியான நீதி நிர்வாக அலகொன்று உருவாக்கப்படும். அந்த நீதிநிர்வாக அலகே நிறுவப்படுகின்ற இடைக்கால நிர்வாக சபை தொடர்பான பிணக்குகளை கையாளும். ( அதாவது புலிகளின் விளையாட்டு நீதிமன்றுகள் சட்ட ரீதியாக்கப்படும். இலங்கை அரச அதிகாரமும் அந்த நீதிமன்றுக்கு கட்டுப்படவேண்டும்)

* வடகிழக்குக்கான வரவுசெலவுத்திட்டத்தை இடைக்கால நிர்வாக சபையே தயாரிக்கும். அதற்காண பணத்தை மத்திய அரசு ஒதுக்கவேண்டும். நிதியை நிர்வாக சபை கையாளும். (புலிகளிடம் பணத்தை கொடுத்துவிட்டு பார்த்துக்கொண்டு இருக்க வேண்டியதுதான்)

* வடகிழக்கிற்கான புனர்நிர்மானப்பணிகளுக்கான நிதியும் இடைக்கால சபைக்கே வழங்கப்படவேண்டும் (மிச்சத்தை புலிகள் பார்த்துக்கொள்வார்கள்)

* இடைக்கால நிர்வாக சபை உள்நாட்டு வெளிநாட்டு அன்பளிப்புக்கள் மற்றும் கடன்களை நேரடியாக பெற்றுக்கொள்ள அதிகாரங்களை கொண்டிருக்கும். (வெளிநாடுகளில் தமிழரிடம் பலவந்தமாக பறிக்கும் பணத்தை தங்குதடையின்றி வன்னிக்கு கொண்டுவர சிறந்த வழி)

* பணத்திற்கான கணக்காய்வு அறிக்கை கணக்காளர் நாயகத்தினால் தயாரக்கப்படும. ஆனால் கணக்காளர் நாயகத்தை இடைக்கால நிர்வாக சபையே நியமிக்கும் (புலிகள் நியமிக்கும் கணக்காளர் நாயகத்தின் அறிக்கை எப்படியிருக்கும்?)

இவ்வாறு 23 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. புலிகளின் குறித்த எழுத்துமூலமான கோரிகையை ரணில் விக்கிமசிங்க மிகவும் புத்திசாலித்தனமாக (பாலசிங்கத்தின் பாஷையில் நரித்தனமாக) பயன்படுத்தினார்.

கோரிக்கையின் எழுத்துமூலத்தை முக்கியமான சக்தி வாய்ந்த நாடுகளுக்கும் அனுப்பி வைத்த ரணில் புலிகள் என்ன கேட்கிறார்கள் என்று புரிகிறதா என சர்வதேசத்தின் மனச்சாட்சின் கதவுகளை தட்டினார்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல்கட்சிகளை செயலிழக்க செய்ய எனக்கு இந்தநாட்டின் அரசியல் யாப்பு அதிகாரமளிக்கவில்லையே! இதை நான் எவ்வாறு நடைமுறைப்படுத்த முடியும் என்று அப்பாவிப்பிள்ளை போல் ஆலோசனை கேட்டார்.

நீங்கள் உங்கள் நாடுகளில் புலிகளை பயங்கரவாதிகள் என தடை செய்துள்ளீர்கள். ஆனால் எங்களை பயங்கரவாதிகளுக்கு அதிகாரத்தை கொடு என்கின்றீர்கள்.

இந்நாட்டின் பிரதமராக நான் எவ்வாறு சகல கட்சிகளதும் உரிமைகளை பறித்து ஒரு கட்சிக்கு அதிகாரம் வழங்கமுடியும் என்று ஒரு கொஞ்சம் காரசாரமாகவும் தூக்கிப்போட்டார்.

பெரிதுபடுத்தவேண்டாம் நாங்கள் அவர்களுடன் பேசுகின்றோம் இணங்கா விட்டால் அடிபோடுவதுதான் ஒரே வழி என்றது சர்வதேசம். ஐயா அடிபோடுறதா? அவர்கள் பிராந்திய வல்லரசையே அடித்து விரட்டிய ராணுவம். என்னிடம் பலமான ராணுவமும் இல்லை ஆயுதங்களும் இல்லை என ரணில் கையை பிசைந்தார். கவலையை விடுங்கள் சகலதும் கிடைக்கும் என்றனர். புலிகளின் தலையெழுத்து நிர்ணயிக்கப்பட்டது.

புலிகளின் முன்மொழிவை தூக்கிக்கொண்டு வன்னிக்கு பறந்தது சர்வதேசம். மிஸ்டர் பிரபாகரன் என்ன கேட்கிறீர்கள் என்று விளங்கவில்லை.

இது மக்களுக்கான தீர்வா அல்ல உங்களுக்கான தீர்வா என்று காரசாரமாக கேட்டது. பிரபாகரனோ மசியவில்லை என்ன ஐசே பேசுகின்றீர்கள்? „

மக்கள் என்றால் புலிகள், புலிகள் என்றால் மக்கள்” என்பது உங்களுக்கு தெரியாதா என்றார். சர்வதேசமும் விட்டபாடில்லை முன்மொழிவை ஜனநாயகப் பண்புகளுக்குட்பட்டதாக எந்தத்தரப்பிற்கும் பின்னடைவு அற்றதாக மாற்றுமாறு புலிகளின் கழுத்தில் கையை வைத்தது.

புலிகளது முழி பிதுங்கியது. ரணில் குள்ள நரி என்று பாலசிங்கம் ஒப்பாரி வைத்தார். சர்வதேசத்தின் அணுங்குப்பிடியில் மாட்டி விட்டதை புலிகள் உணர்ந்தனர். மாற்று வழியைத்தேடினர்.

அத்தருணத்தில் ஜனாதிபதி தேர்தலுக்காக இருவர் போட்டியிட்டனர். ரணிலை எதிர்த்து மஹிந்த போட்டியிட்டார். சர்வதேச செல்வாக்குள்ள ரணிலை தோற்கடித்தால் சர்வதேசத்தின் பிடியிலிருந்து தாங்கள் விடுபடலாம் எனவும் சர்வதேச தொடர்புகள் அற்ற மஹிந்தவின் காதில் பூச்சுத்தலாம் எனவும் கருதிய புலிகள் மஹிந்தவை வெல்ல வைப்பதற்கு பேரம் பேசினர். கோடிகள் மாறப்பட்டது.

வடகிழக்கு தமிழ் மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. வாக்களித்தால் கைவெட்டப்படுமென எச்சரிக்கப்பட்டது. அவ்வாறு வாக்களித்த ஓரிருவரின் கைகளும் வெட்டப்பட்டது.

புலிகளின் கனவு பகற்கனவானது. முள்ளிவாய்காலில் ஏகப்பிரதிநிதித்துவம் நிறைவுபெற்றது. ஆனால் புலிவால்கள் இந்த உண்மையை மறைக்க எத்தகைய முயற்சிகளை செய்தாலும் உண்மைகள் என்றும் அழியாது. நன்றி.

புலிகள் கோரிய இடைக்கால நிர்வாக சபைக்கான முன்மொழிவின் முழுவடிவம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பாக எங்கு குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை யாவரும் வாசித்தறியலாம்.