நீர்பாசனத் திணைக்கள புவனேஸ்வரி வெட்டிக் கொலை செய்யப்பட்டது ஏன்?

பாலாவி ரத்மல்யாய பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து, பெண்ணொருவர் நேற்று முன்தினம் (21) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியைச் சேர்ந்த, புவனேஸ்வரி (வயது 61) என்ற பெண்ணே இவ்வாறு கழுத்து வெட்டப்பட்ட நிலையில் கடுமையான பாலியல் வல்லுறவுக்குப் பின்னர் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

 

புத்தளம் நீர்பாசனத் திணைக்களத்தில் கடமையாற்றி ஓய்வுபெற்ற குறித்த பெண், தற்போது புத்தளம் நகரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். அத்துடன் குறித்தப் பெண் தனது மூத்த சகோதரியுடன் இந்த வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார்.

சகோதரி இரண்டு வாரங்களுக்கு முன்னர் மன்னாருக்குச் சென்றுள்ள நிலையில், குறித்த பெண் மாத்திரம் அவ்வீட்டில் இருந்துள்ளார்.

மன்னாரில் உள்ள உறவினர்கள் குறித்த பெண்ணின் அலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்திய போது, பதில் எதுவும் கிடைக்காமையினால் பக்கத்தில் உள்ள மற்றைய உறவினர் ஒருவரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, பெண்ணின் உறவினர் ஒருவர் நேற்று முன்தினம் (21) நண்பகல் அங்கு சென்றுள்ளார். இதன்போது, வீட்டின் முன்வாசல் கதவு பூட்டப்பட்டிருப்பதையும், வீட்டின் இரண்டு யன்னல்கள் திறந்து நிலையில் காணப்பட்டுள்ளதையும் அவதானித்துள்ளார்.

இந்நிலையில் சந்தேகம் கொண்ட குறித்த நபர், இதுபற்றி அயலில் உள்ள மக்களுக்கு தெரியப்படுத்தியதுடன், அந்த மக்களின் உதவியுடன் வீட்டின் மதில் மீது ஏறி வீட்டு வளவுக்குள் சென்றுள்ளதுடன், யன்னல்கள் ஊடாக பார்த்துள்ளார்.

இதன்போது வீட்டுக்குள் அறைகளில் இருந்த அலுமாரிகள் திறந்து கிடப்பதையும், பொருட்கள் ஆங்காங்கே வீசப்பட்டு அலங்கோலமாக காட்சியளித்துள்ளதையும், அந்த வீட்டின் சமயலறைக்குள் குறித்த பெண் இரத்த வெள்ளத்தில் கிடப்பதையும் அவதானித்துள்ளார்.

இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து , சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக புத்தளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் வீட்டு வளாகத்தில் இருந்து இரண்டு சைக்கிள்களைகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர். கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பில் புத்தளம் தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் அனுர குணவர்தன தலைமையிலான பொலிஸாரும், குற்றப்புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, குறித்த படுகொலைச் சம்பவம் அப்பகுதியில் மாத்திரமன்றி, அதனைச் சூழவுள்ள பிரதேசத்திலும் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதே வேளை புனவேஸ்வரியைக் கொலை செய்த சந்தேகத்தின் பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

தாயகச்செய்திகள்