பொப்பிசை சக்கரவர்த்தி ஏ.ஈ.மனோகரன் காலமானார்

எழுபதுகளில் தமிழ் இசை உலகில் சூறாவளியாய் அடித்த சூராங்கனி..

தனது 73 வது வயதில் இரண்டு சிறு நீரகங்களும் பழுதான நிலையில் பொப்பிசை சக்கரவர்த்தி ஏ.ஈ. மனோகரன் இன்று சென்னையில் காலமானார்.

இலங்கை முதல் தமிழர் வாழும் நாடுகளில் எல்லாம் பொப்பிசை என்றவுடன் நினைவுக்கு வரும் சக்கரவர்த்தி ஏ.ஈ.மனோகரன்தான், காலங்கள் மாறினாலும் மாறாமல் இன்றும் அவருடைய பாடல்கள் பொப்பிசை வானில் பட்டொளி வீசிப் பறந்து வருகின்றன.சிலோன் மனோகர், சுராங்கனி மனோகர் என்றும் இவர் அழைக்கப்பட்டிருக்கிறார்.

பொப்பிசை பாடலில் மட்டுமல்ல சுமார் 260 வரையான தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார், பல்லாயிரக்கணக்கான மேடை நிகழ்ச்சிகளால் இசை வானை அலங்கரித்த நட்சத்திரம். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக இருந்தவர்.

ae-m-3

1964 ம் ஆண்டு இலங்கையில் வெளியான ஜோ தேவானந்தாவின் பாசநிலா திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார், இலங்கையில் ஜனாதிபதி விருது பெற்ற வாடைக்காற்று திரைப்படத்தில் முக்கிய பாத்திரத்திலும் தோன்றியிருந்தார்.

சிங்களத்தில் சூராங்கனி என்றால் அவரை தெரியாதவர் யாரும் இருக்கமாட்டார்கள்.

சிவாஜிகணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், தர்மேந்திரா உட்பட இந்திய பிரபல ஸ்டார்களுடனெல்லாம் இணைந்து நடித்தவர், தமிழகத்தின் திரையிசைப் பாடல்களால் புகழ் பெற்ற இலங்கை வானொலியில் எழுபதுகளில் பொப்பிசை பாடல்கள் பெரு வெள்ளமாக பாய்ந்தபோது எங்கே தமிழக திரையிசை அள்ளுண்டு போய்விடுமோ என்று அஞ்சுமளவுக்கு பொப்பிசைப் பாடல்களால் திரைப்பட பாடல்களை பின் தள்ளியவர்களில் ஒருவர், சிங்கள இசையுலகிலும் முடிசூடா மன்னாக வாழ்ந்தவர்.

இலங்கையின் இசையரங்கு என்றுமில்லாத பொப்பிசை வெள்ளமாக பாய்ந்தது ஒரு காலம், தமிழக பாடல்களை விட்டு பொப்பிசை பாடல் இசைத்தட்டுக்களே ஒலி பெருக்கிகளில் பனை மரங்களில் இருந்து இசைத்தபோது இலங்கையின் இசை வெற்றி ஆனந்தம் தந்தது.

அள்ளி வீசும் சோளகக் காற்று, தேநீர்க்கடையில் காற்றில் சுழவும் கதலிவாழைக்குலை, அடித்து ஆற்றும் தேநீரில் பொங்கும் நுரையில் எங்கோ ஒரு மூலையில் இருந்து பலகையால் செய்யப்பட்ட வானொலிப் பெட்டியில் வரும் ஏ.ஈ.மனோகரனின் பாடலுக்குள்ள சுகம் சொல்லத்தான் முடியுமா..

ae-m1

மேடையில் தோன்றுவதென்றால் அதற்கு ஒரு தனியான கெத்து இருக்க வேண்டுமென எழுபதுகளிலேயே நினைத்தவர், ஒரு பக்கம் ஓடையை உடைத்துப் பாயும் மதுரக் குரலோன் பி.எச்.அப்துல்ஹமீட் அவர்களின் தமிழோடு தமிழாக துள்ளித்துள்ளி ஆடும் ஏ.ஈ.மனோகரன் போல ஒரு பாடகன் உண்டா இந்த உலகில் என்று அந்தக்காலத்தே அவர்; பாடல்களை கேட்டவர்கள் கூறுவார்கள்.

எத்தனையோ மேடைகளில் ரசிகர்கள் சுற்றி வளைத்து வண்ஸ்மோர் கேட்ட பாடகர், இசைக்குழுக்கள் யாராக இருந்தாலும் கொழும்பில் இருந்து வரும் போது ஒரு கிட்டார் வாத்திய கலைஞருடன் வருவார், மேடை ஏறினால் அவருடைய கட்டுப்பாட்டில் முழு மேடையுமே வந்துவிடும். அவர் நிற்கும் மேடையில் மற்ற எல்லாமே மறைந்துவிடும்.

ஒரு திரைப்பட நடிகருக்கு இல்லாத பெருமையை தன் குரலாலும், இசை வழங்கும் முறையாலும் தேடிக் கொண்டவர்.

அன்றொருநாள் இலங்கையில் இருந்து இந்தியா சென்று புகழடைந்த ஜே.பி.சந்திரபாபு போல இவரும் தமிழக திரைவானில் புகழடைந்தார், கண்மணி பாப்பா கோழி பிறந்தது முட்டைக்குதானென்று சொன்னது தப்பா என்ற சந்திரபாபு பாடலை இவர் அடிக்கடி பாடுவது வழமை.

இவருடைய பொப்பிசை பாடல்களில் முதலில் புகழ் பெற்றது வடை வடையென விற்று வந்தாள் வாயாடிக் கிழவி சுடச்சுடவே விற்று வந்தாள் சிங்காரக் கிழவி நடை நடையாய் விற்று வந்த களைப்புத் தீரவே நடுத்தெருவில் இருந்துவிட்டாள் கண்ணான கிழவி என்றால் போதுமே.

பொப்பிசை பாடகர்களில் இவர் ஒரு கவர்ச்சி மன்னனாகவே இருந்தார், சாயிபாபா போல சுருண்ட கேசம், குறுந்தாடி பளபளவென மின்னிடும் ஜிகினா சட்டை, சில வேளைகளில் எம்.ஜி.ஆரின் வெண் பஞ்சுத்தொப்பி சகிதம் மேடையில் ஏறுவார், பின் தொப்பியை கழற்றி வீசிவிட்டு பாடுவார் அப்போது அவருடைய தலை முடியுடன் போடும் ஆட்டம், ஒரு பக்கம் தலையை சாய்த்து பாடும் பாடல் அபாரமோ அபாரம்.

ae-4

ஏ.ஈ மனோகரன் அக்காலத்தே ஆலயங்களின் ஆடம்பர திருவிழாக்களிலும் பாடுவதற்கு வருவார், அவர் வருகிறார் என்றார் கூட்டம் அலைமோதும் வந்தவுடன் மேடையில் சோர்வாக ஏறமாட்டார் துடிதுடிப்பாக இயங்கத் தொடங்கிவிடுவார்.

அதிகாலை நான்கு மணிக்கு மேடையேறினாலும் ஏ.ஈ. மனோகரனின் துடியாட்டம் குறையாது, மால் மருகா எழில் வேல்முருகா நீயே என்றால் போதும் பொப்பிசை என்பதை மறந்து பக்தர்கள் ஆட்டம் போடத் தொடங்கிவிடுவார்கள்.

கோயில் மணலில் கொறட்டை விட்டு தூங்கியவனும் துடித்தெழுந்து ஆட்டம் போடத் தொடங்கிவிடுவான், குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டமா என்ற பாடலையே அவருடைய மால்மருகா ஏப்பம் விட்டுவிடும்.

பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபம், கண்டி, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், அரியாலை என்று சுழன்றது பொப்பிசைப் புயல்.

இவருடைய இன்னொரு போட்டிப் பாடகர் நித்திகனகரத்தினத்தின் சின்னமாமியே பாடலை பட்டுமாமியே உன் சிட்டு மகளெங்கே என்றும் பாடியிருக்கிறார், மனோகரன் காலத்தில் பொப்பிசை பிதா நித்தி கனகரத்தினம், பொப்பிசை திலகம் எஸ்.இராமச்சந்திரன், அமுதன் அண்ணாமலை, ஸ்ரனிஸ் சிவானந்தன், முத்தழகு, எம்.எஸ். பெர்ணாண்டோ போன்றவர்கள் திரை நட்சத்திரங்கள் போல மக்கள் மனங்களில் நிறைந்திருந்தார்கள்.

ஏ.ஈ.மனோகரன் இசை ஆல்பத்தை நோக்கினால் அவருடைய பாடல்களை எல்லாம் இந்திய மாநில மொழிகளில் எல்லாம் மாற்றிப் பாடிவிட்டுப் போயிருக்கிறார், இலங்கையில் மலர்ந்த இசையை இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் பாடிப்போனவர் இவரை விட்டால் வேறு யார் என்ற கேள்விக்கு இன்னொருவரை நிறுத்தத்தான் முடியுமா..

ae-2

யாழ் முற்றவெளியிலே கலசம் நைற் என்ற இசை நிகழ்ச்சி நடந்தது வரலாறு காணாத ஜன சமுத்திரத்தில் குடாநாடு மூழ்கியது பிரபல அறிவிப்பாளர்களோடு இவர் பாடிய பாடல்கள் அரங்கத்தைக் கட்டிப் போட்டன. 1973ம் ஆண்டு யாழ்ப்பாணத்தின் முற்றவெளியிலேயே இவருக்கு பொப்பிசை சக்கரவர்த்தி என்ற பட்டம் வழங்கப்பட்டது.

தமிழர் புலம் பெயர்ந்த பின்னர் வெளிநாடுகளில் இவருடைய கச்சேரிகள் களைகட்டின, பிற்காலத்தில் கிறீத்தவ பாடல்களையும் பாடியிருக்கிறார்.

அவருடைய குரலுக்கு தனியான இனிமை இருக்கிறது, இலங்கை மலையகத்தில் பூத்த இன்னிசைப்பாடகர்களில் அகில உலகத்தையே சுருட்டிப்போட்ட ஒருவரென்றால் அது ஏ.ஈ.மனோகரன்தான்.

இப்படியொரு பாடகர் இலங்கை மண்ணில் பிறந்திருக்கிறார் என்றால் அந்த நாட்டில் அவருடைய வாழ்வு பெற்றிருக்க வேண்டிய உயர்வு சாதாரணமானதாக இருந்திருக்கக் கூடாது, ஆனால் போர் அவருடைய வாழ்வையும் புலம் பெயர வைத்துவிட்டது.

இன்று இலங்கையில் அதி உயர் மரியாதைகளுடன் நாடு முழுவதையும் ஊர்வலமாக சுற்றிவர வேண்டிய ஒரு பாடகனின் மரணம் பற்றி இலங்கை ஊடகங்களில் இதுவரை செய்திகள் வரவில்லை.

தமிழகத்திலும் இவர் போன்ற இலங்கைப் பாடகர்களை மதிக்கும் பழக்கம் இன்னமும் வரவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

ae-5

அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவ்வப்போது கதைகள் வந்தாலும் கலைஞன், பாடகன், நடிகன் என்று பார்த்தால் ஏ.ஈ.மனோகரனின் இடத்தை அவரைத் தவிர இன்னொருவரால் இதுவரை ஈடு செய்ய முடியவில்லை, இனியும் அது சாத்தியமா என்பதும் தெரியவில்லை.

வடையும் காகமும் இருக்கும்வரை ஏ.ஈ.மனோகரனுக்கும் அழிவில்லை, பொப்பிசை வானில் அவருக்கென்று ஓர் இடம் என்றுமே இருக்கும்.

பகலெல்லாம் மாடாய் உழைத்து களைத்து வந்து உட்காரும் தொழிலாளி தன் உடல் வலி எல்லாம் மறந்து துள்ளி ஆடிப் பாடும்போது இசையின் பெருமை கண்கலங்க வைக்கும்.

சினிமாப் பாடல்கள் வேண்டாம் பொப்பிசை பாடல்களே போதுமென இலங்கை இசை மேடைகள் மாறக்காரணமானவர்களில் இவர் முக்கியமானவர், பொப்பிசை பாடல் என்று இலங்கை வானொலியில் பெயரிட்ட விவியன் நமசிவாயம், அதை முன்னெடுத்த பி.எச்.அப்துல் ஹமீட் போன்றவர்கள் காலத்தில் பூத்த பொப்பிசைப்புதுமலர் வாடிவிட்டது.

இன்று பொப்பிசை நேசர்களை எல்லாம் கலங்கச் செய்து பறந்து போய்விட்டது அந்த பொப்பிசை பாடிய காக்கா..

அலைகளுக்காக கி.செ.துரை 22.01.2018 திங்கள் இரவு

துயர் பகிர்தல்