ரணில் பதவியில் இருந்து விலக வேண்டும் : எஸ்.எம்.ரஞ்சித் தெரிவிப்பு!

பொதுமக்களின் பணத்தை கொள்ளையடித்த ரவி கருணாநாயக்கவை போன்று ரணில் விக்ரமசிங்கவும் பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என வட மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு இல்லாவிடின் பெப்ரவரி 10 ஆம் திகதி கிடைக்கும் மக்கள் பலத்தின் ஊடாக மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் அமைக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீலங்காவில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அலுவலகங்கள் இன்று செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளன.

முள்ளியவளை, ஹிஸ்ராபுரம், சிலாவத்தை, செம்மலை, வெலிஓயா போன்ற பகுதிகளில் 7 அலுவலகங்கள் இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் மாவட்ட இணைப்பாளர் துசார இதன்போது தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வடமாகாண இணைப்பாளரும் வடமத்திய மாகாண முன்னாள முதலமைச்சரும் எஸ்.எம்.ரஞ்சித்தினால் முள்ளிவளை ஹிஸ்ராபுரத்தில் கட்சி அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எஸ்.எம்.ரஞ்சித், மனிதாபிமான நடவடிக்கை மூலம் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த மஹிந்த ராஜபக்சவே, வட மாகாணத்தில் அபிவிருத்தியை மேற்கொண்டதாக குறிப்பிட்டார்.