வட மாகாண அபிவிருத்தியில் மாகாண சபையையும் உள்வாங்குங்கள் விக்னேஸ்வரன்

வடமாகாணத்தில் மேற்கொள்ளப்படும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்களை செயன்முறைப்படுத்தும்போது அந்த நடவடிக்கைகளில் வடமாகாணசபையையும் உள்வாங்கவேண்டும் என என வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் இலங்கைக்கான இந்திய தூதுவர் தரண்ஜித்த சிங் சந்துவிற்கும் வடமாகாண முதல்வர் சிவி விக்னேஸ்வரனிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே முதலமைச்சரால் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்திய அரசாங்கம் 45.27 மில்லியன் டொலரினை கடனாக வழங்குவதற்காக தீர்மானித்துள்ளதுடன் இது தொடர்பான உடன்படிக்கையும் கைச்சாத்தாகியுள்ளது.

இந்தநிலையில் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திப்பணிகளில் வடமாகாண சபையையும் உள்வாங்கவேண்டும் என முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த காலங்களில் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளும்போது அந்த திட்டத்தை அமுல்படுத்துபவர்களும் அதற்கான நிதி உதவியினை வழங்குபவர்களும்மத்திய அரசும் மாத்திரமே சம்பந்தபட்டிருந்தனர் ஆனால் இவ்வாறான சந்தர்ப்பங்களில் கடந்த காலங்களில் வடமாகாண சபை உள்வாங்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சூழ்நிலையில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் திட்;டங்களிலாவது வடக்கு மாகாண சபை அப்பகுதியில் மேற்கொள்ளப்படும் திட்டங்களில் உள்வாங்கப்படவேண்டும் என இந்திய தூதுவரிடம் தெரிவித்ததாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இதேவேளை யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களிற்காக புதிதாக 50.000 வீட்டுத்திட்டங்களை வழங்குவதற்கு இந்தியா முன்வரவேண்டும் எனவும் முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தாயகச்செய்திகள்