தமிழ் இளைஞர்கள் கடத்தல் விவகாரம்: சந்தேகநபர்களுக்கு பிணை!!

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருந்த கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பி.தஸநாயக்க உள்ளிட்ட ஆறு சந்தேகநபர்களும் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2008 மற்றும் 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற குறித்த கடத்தல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.

இதன்போதே ஆறு பேரையும் தலா ஒரு இலட்சம் ரூபாய் ரொக்கப்பிணை மற்றும் ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப்பிணைகளில் நீதிபதி மணிலால் வைத்தியரத்ன விடுவித்துள்ளார்.

இதேவேளை கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் செய்யப்பட்டனர்.

கடந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில், நல்லாட்சி அரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் கடற்படையின் முன்னாள் பேச்சாளர் உள்ளிட்ட ஆறுபேர் கடந்த வருடம் ஜூலை மாதம் 12ஆம் திகதி குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டனர்.

சுமார் 6 மாத காலமாக குற்றப்புலனாய்வு பிரிவினர் நடத்திய விசாரணையில், குறித்த இளைஞர்கள் திருகோணமலை கடற்படை முகாமுக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக நீதிமன்றில் ஏற்கனவே அறிக்கை சமர்ப்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் குறித்த இளைஞர்கள் அனைவரும் பணத்திற்காகவே கடத்தப்பட்டனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்தது.

இந்நிலையில், சந்தேகநபர்களுக்கு தற்போது பிணை வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Allgemein